வெள்ளத்தால் வீடுகளை இழந்திருந்தாலும் நிவாரணம் பெற பாதிக்கப்பட்ட மக்கள் ஆர்வம் காட்டவில்லை மந்திரி மாதுசாமி பேட்டி
வெள்ளத்தால் வீடுகளை இழந்திருந்தாலும் நிவாரணம் பெற பாதிக்கப்பட்ட மக்கள் ஆர்வம் காட்டவில்லை என்று மந்திரி மாதுசாமி தெரிவித்துள்ளார்.
பெங்களூரு,
வெள்ளத்தால் வீடுகளை இழந்திருந்தாலும் நிவாரணம் பெற பாதிக்கப்பட்ட மக்கள் ஆர்வம் காட்டவில்லை என்று மந்திரி மாதுசாமி தெரிவித்துள்ளார்.
துமகூருவில் நேற்று மந்திரி மாதுசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
கூடுதல் நிதியை வழங்கும்
கர்நாடகத்தில் வெள்ள நிவாரண பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு ரூ.1,200 கோடி நிதி வழங்கியுள்ளது. கூடிய விரைவில் கூடுதல் நிதியை கர்நாடகத்திற்கு மத்திய அரசு வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி வெளிநாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்ததால் தான் மாநிலத்திற்கு நிவாரணம் வழங்க காலதாமதம் ஆவதாக முதல்-மந்திரி உள்பட அனைவரும் கூறி வந்தோம். ஆனால் மத்திய அரசு நிவாரணம் வழங்கவில்லை என்று எதிர்க்கட்சி தலைவர்கள் குற்றச்சாட்டு கூறினார்கள்.
தற்போது இடைக்கால நிதியாக மத்திய அரசு ரூ.1,200 கோடி வழங்கி இருக்கிறது. மத்திய அரசு நிவாரணம் வழங்க காலதாமதம் ஆனாலும், மாநில அரசு உடனடியாக நிதி ஒதுக்கி நிவாரண பணிகளை துரிதமாக மேற்கொண்டது.
ஆர்வம் காட்டவில்லை
மாநிலத்தில் 40 ஆயிரம் முதல் 80 ஆயிரம் வீடுகள் முழுமையாக சேதம் அடைந்திருப்பதாக அதிகாரிகள் அரசுக்கு அறிக்கை அளித்துள்ளனர். முழுமையாக வீடுகளை இழந்தவர்கள், முதற்கட்டமாக வீடு கட்டும் பணியை மேற்கொள்ள ரூ.1 லட்சமும், சேதம் அடைந்த வீடுகளை சரிசெய்வதற்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மழை, வெள்ளத்தால் வீடுகளை இழந்த மக்கள், நிவாரணம் பெற ஆர்வம் காட்டவில்லை. வீடுகளை கட்டுவதற்கும் அவர்கள் விரும்பவில்லை. ஏனெனில் 40 ஆயிரம் முதல் 80 ஆயிரம் வீடுகள் முழுவதுமாக சேதம் அடைந்திருக்கிறது.
ஆனால் வீடுகள் கட்டுவதற்காக மாவட்ட கலெக்டர்களிடம் ஆவணங்களை வழங்கி நிவாரணம் பெற 9 ஆயிரம் பேர் மட்டுமே மனுக்கள் கொடுத்துள்ளனர். நிவாரண பணிகளை மேற்கொள்வதில் மாநில அரசு தோல்வி அடையவில்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுக்க அரசு தயாராக உள்ளது. இந்த விவகாரத்தில் மாநில அரசு மீது குற்றச்சாட்டு கூறுவது சரியல்ல.
இவ்வாறு மந்திரி மாதுசாமி கூறினார்.