சமையல் எரிவாயு மானியம் கிடைப்பது இல்லை குடும்ப தலைவிகள் குற்றச்சாட்டு

சமையல் எரிவாயுக்கு வழங்கப்படும் மானியம் சரியாக கிடைப்பது இல்லை குடும்ப தலைவிகள் உள்பட நுகர்வோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Update: 2019-10-05 22:30 GMT
சென்னை,

பொதுத்துறை நிறுவனங்களான இந்தியன் ஆயில் நிறுவனம், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ஆகியவை சமையல் கியாஸ் சிலிண்டர்களை வினியோகம் செய்கின்றன. வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மத்திய அரசு மானியம் வழங்கி வருகிறது. இந்த மானியத்தொகை வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் கடந்த சில மாதங்களாக சமையல் எரிவாயுவுக்கு வழங்கப்பட்டு வரும் மானியம் கிடைக்கவில்லை என்று குடும்ப தலைவிகள் உள்பட நுகர்வோர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதேபோல மானியமாக கிடைக்கும் தொகை படிப்படியாக குறைந்து வருவதாகவும், மானியத்தை ரத்து செய்வதற்கான முன்னோட்டமாகவே மானியம் குறைக்கப்படுவதாகவும், பழைய முறையே தொடரவேண்டும் என்றும் சிலர் வலியுறுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து கியாஸ் சிலிண்டர் வினியோகஸ்தர்களிடம் கேட்டதற்கு, “வங்கிகள் இணைப்பு நடவடிக்கைக்கு பின்னர் மானியம் வரவில்லை என்ற புகார்கள் வாடிக்கையாளர்களிடம் இருந்து எங்களுக்கு அதிகமாக வருகிறது. சர்வரில் சிக்கல் ஏற்படுகிறது. ஒரு வாடிக்கையாளர் தனது ஆதார் எண்ணை வெவ்வேறு வங்கிகளில் கொடுத்திருந்தாலும் இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது” என்றனர்.

இதுகுறித்து இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரிகளிடம் கேட்டதற்கு, ‘வாடிக்கையாளர்கள் தெரிவிக்கும் புகார்களை நிவர்த்தி செய்வதற்காக மண்டல அளவில் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுதவிர வாடிக்கையாளர்கள் சமையல் எரிவாயு பெற்றதற்காக கொடுக்கப்படும் ரசீதிலும் புகார் கொடுக்கவேண்டிய தொலைபேசி எண் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் வாடிக்கையாளர்கள் தெரிவிக்கும் புகார்கள் உடனடியாக நிவர்த்தி செய்யப்படுகிறது. பெட்ரோலிய அமைச்சகத்துக்கு உட்பட்ட இ-சேவா இணையதளத்திலும் புகார்களை பதிவு செய்யலாம்’ என்றனர்.

மேலும் செய்திகள்