நடப்பு கல்வி ஆண்டு அமல் கர்நாடகத்தில் 7-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு கல்வித்துறை மந்திரி சுரேஷ் குமார் அறிவிப்பு

கர்நாடகத்தில் நடப்பு கல்வி ஆண்டு முதல் 7-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு அமல்படுத்தப்படும் என்று கல்வித்துறை மந்திரி சுரேஷ் குமார் அறிவித்தார்.

Update: 2019-10-05 22:30 GMT
பெங்களூரு, 

கர்நாடகத்தில் நடப்பு கல்வி ஆண்டு முதல் 7-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு அமல்படுத்தப்படும் என்று கல்வித்துறை மந்திரி சுரேஷ் குமார் அறிவித்தார்.

7-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு

கர்நாடகத்தில் இதற்கு முன்பு 7 மற்றும் 10-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு பொதுத்தேர்வு நடைபெற்றது. கடந்த 2004-2005-ம் கல்வி ஆண்டில் 7-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் மாநிலத்தில் பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வந்தது.

இந்த நிலையில் மாநிலத்தில் நடப்பு கல்வி ஆண்டில் 7-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று தொடக்க மற்றும் உயர் கல்வித்துறை மந்திரி சுரேஷ் குமார் அறிவித்துள்ளார். இதுகுறித்து மந்திரி சுரேஷ் குமார் பெங்களூரு சர்வசிக்‌ஷா அபியான் அலுவலகத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

மார்ச் மாதம் தேர்வு

மாணவ-மாணவிகளை 9-ம் வகுப்பு வரை தோல்வி அடைய செய்யாமல் கட்டாயமாக தேர்ச்சி செய்ததால் மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்படும் கல்வியின் தரம் குறைந்துள்ளது. இதுபற்றி பெற்றோர், ஆசிரியர்கள் புகார்கள் அளித்தனர். இதை சரிசெய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. அதன்படி நடப்பு கல்வி ஆண்டில் 7-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட உள்ளது.

இந்த தேர்வானது மார்ச் மாதம் நடைபெறும். 10-ம் வகுப்பு மாணவர்களின் பொதுத்தேர்வுக்கு வினாத்தாள் தயாரிப்பது போன்று இந்த தேர்வுக்கும் வினாத்தாள் தயாரிக்க தனிக்குழு அமைக்கப்படும். தேர்வு விடைத்தாள்கள் ஒவ்வொரு மாவட்டங்களிலும் விடைத்தாள் திருத்தும் மையங்களில் திருத்தம் செய்யப்படும். தேர்வுக்கான கேள்வித்தாள் மாதிரிகள் வெளியிடப்படும். தற்போதைய கல்வி ஆண்டு கால்பகுதியை கடந்துவிட்டது. இதனால் அடுத்த ஆண்டு நடைபெறும் பொதுத்தேர்வில் 7-ம் வகுப்பு மாணவ-மாணவிகள் அனைவரும் தேர்ச்சி செய்யப்படுவார்கள். 2020-21-வது கல்வி ஆண்டில் இருந்து முறைப்படி பொதுத்தேர்வு நடத்தப்படும்.

கட்டாய பணி இடமாற்றத்தில் சலுகை

மேலும், ஆசிரியர், ஆசிரியைகளுக்கான கட்டாய பணி இடமாற்ற விதிமுறைகளில் திருத்தம் செய்ய மாநில அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி திருத்தம் செய்யப்படும். அதன்படி 50 வயது தாண்டிய ஆசிரியைகளுக்கு கட்டாய பணி இடமாற்றம் செய்யப்படுவது இல்லை. 55 வயது நிரம்பிய ஆசிரியர்களுக்கும் கட்டாய பணி இடமாற்றத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

கிராமப்புறங்களில் 15 ஆண்டுகள் பணியாற்றும் ஆசிரியர், ஆசிரியைகளுக்கு சலுகைகள் வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு பாடம் நடத்தும் ஆசிரியர்கள் மற்றும் விதவை ஆசிரியைகளுக்கும் கட்டாய பணி இடமாற்றத்தில் இருந்து சலுகை அளிக்கப்படுகிறது.

புத்தகப்பை இல்லாமல்...

வரும் நாட்களில் ஒவ்வொரு சனிக்கிழமைகளில் புத்தகப்பை இல்லாமல் மாணவ-மாணவிகள் பள்ளிக்கு வரும் நடைமுறை அறிமுகம் செய்யப்பட உள்ளது. முதலில் சோதனை அடிப்படையில் இது நடைமுறைப்படுத்தப்படும். அதன்பிறகு மாநிலம் முழுவதும் விஸ்தரிக்கப்படும். புத்தகப்பை இல்லாத நாளில் மாணவ-மாணவிகளுக்கு அவர்களின் தனித்திறமையை வளர்க்க வழிக்காட்டப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்