கல்லூரி மாணவியை மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்ற காதலனுக்கு கத்திக்குத்து தந்தைக்கு வலைவீச்சு

குலசேகரம் அருகே கல்லூரி மாணவியை மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்ற காதலனுக்கு கத்திக்குத்து விழுந்தது. இதுதொடர்பாக மாணவியின் தந்தையை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

Update: 2019-10-05 22:15 GMT
குலசேகரம்,

குமரி மாவட்டம் குலசேகரம் கேட்டூர்கோணம் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 21). மின்வாரியத்தில் தற்காலிக ஊழியராக வேலை பார்த்து வருகிறார். சூரியகோடு பகுதியை சேர்ந்தவர் ராஜன் (55). விக்னேசும், ராஜனும் உறவினர்கள் ஆவர். ராஜனின் மகள் தக்கலை அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 2 வருடங்களாக விக்னேசும், ராஜனின் மகளும் காதலித்து வந்ததாக தெரிகிறது.

மேலும் விக்னேஷ், அவ்வப்போது மாணவியை மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்று கல்லூரியில் விடுவது வழக்கமாம். இந்த காதல் விவகாரம் மாணவியின் குடும்பத்தினருக்கு அரசல், புரசலாக தெரிய வந்தது. எனினும் அதனை வெளிக்காட்டாமல் ராஜன் கோபத்துடன் இருந்ததாக கூறப்படுகிறது.

கத்திக்குத்து

இதற்கிடையே சம்பவத்தன்று விக்னேசும், மாணவியும் மோட்டார் சைக்கிளில் பேச்சிப்பாறை பகுதியில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக எதேச்சையாக சென்ற ராஜன், தன்னுடைய மகள் விக்னேசுடன் செல்வதை பார்த்து ஆத்திரமடைந்தார். உடனே அவர் மோட்டார் சைக்கிளை தடுத்து நிறுத்தினார்.

பின்னர் திடீரென தான் வைத்திருந்த கத்தியால் ஆவேசமாக விக்னேசை குத்தி விட்டு தப்பி ஓடி விட்டார். கத்திக்குத்தில் படுகாயமடைந்த விக்னேஷை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பரபரப்பு

மேலும் இதுகுறித்து குலசேகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜனை வலைவீசி தேடிவருகின்றனர். மகளின் காதலனை, அவருடையே தந்தையே கத்தியால் குத்திய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

மேலும் செய்திகள்