அஞ்செட்டி அருகே சோகம்: 2 குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்று பெண் தற்கொலை

அஞ்செட்டி அருகே குடிபோதையில் கணவர் அடிக்கடி தகராறு செய்ததால் 2 குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்று விட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார். இந்த சோக சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

Update: 2019-10-04 23:15 GMT
தேன்கனிக்கோட்டை, 

கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே உள்ளது கொடகரை கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் பசவராஜ் (வயது 35). கூலித்தொழிலாளி. இவரது மனைவி நாகம்மா(26). இவர்களுக்கு பிரேமா (7) என்ற மகளும், பிரசாந்த்குமார் (3) என்ற மகனும் இருந்தனர். நேற்று முன்தினம் மாலை நாகம்மா தனது மகன் மற்றும் மகளுடன் வீட்டில் இருந்து வெளியே சென்றார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. அவர்களை உறவினர்கள் பல இடங்களில் தேடி பார்த்தார்கள். ஆனாலும் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்த நிலையில் நேற்று காலையில் நாகம்மாவின் வீட்டில் இருந்து சிறிது தொலைவில் பெலமரபோடு என்ற இடத்தில் உள்ள கிணறு ஒன்றில் நாகம்மா, அவரது மகள் பிரேமா, மகன் பிரசாந்த் குமார் ஆகியோர் பிணமாக மிதந்தனர். இதைப் பார்த்து அந்த வழியாக சென்ற பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அவர்கள் அஞ்செட்டி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

பின்னர் அவர்கள், பொதுமக்கள் உதவியுடன் கிணற்றில் பிணமாக மிதந்த நாகம்மா மற்றும் குழந்தைகள் பிரேமா, பிரசாந்த் குமார் ஆகியோரின் உடல்களை மீட்டு மேலே கொண்டு வந்தனர். இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவல்கள் வருமாறு:-

நாகம்மாவின் கணவர் பசவராஜிக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால் அவர் குடும்பம் நடத்த வீட்டிற்கு பணம் கொடுக்காமல் இருந்து வந்தார். இதன் காரணமாக நாகம்மா கூலி வேலைக்கு சென்று அதில் கிடைத்த வருமானத்தில் குழந்தைகளை காப்பாற்றி வந்தார். இது தொடர்பாக கணவன் - மனைவி இடையே ஏற்கனவே பிரச்சினை இருந்தது.

தினமும் மது குடித்து விட்டு வரும் பசவராஜ் குடிபோதையில் மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்தார். இதனால் மனமுடைந்த நாகம்மா தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். தான் இறந்து விட்டால், குழந்தைகளை யாரும் காப்பாற்ற மாட்டார்கள் என எண்ணிய நாகம்மா, தனது மகள் பிரேமா, மற்றும் மகன் பிரசாந்த்குமார் ஆகியோரை கிணற்றில் தூக்கி வீசி கொன்று விட்டு, தானும் அதே கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்தது.

இறந்து போன 3 பேரின் உடல்களை பார்த்து உறவினர்கள் கதறி அழுதது அங்கிருந்தவர்களையும் கண்கலங்க செய்தது. இதையடுத்து அவர்களின் உடல்களை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக அஞ்செட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

குடிகார கணவனால் 2 குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்று விட்டு பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்