விற்பனைக்காக கூண்டில் அடைத்து வைத்திருந்த 300 பச்சை கிளிகள் பறிமுதல் - 2 பேருக்கு தலா ரூ.25 ஆயிரம் அபராதம்
திருச்சியில் விற்பனைக்காக கூண்டில் அடைத்து வைத்திருந்த 300 பச்சை கிளிகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 2 பேருக்கு தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
திருச்சி,
திருச்சி மாவட்டத்தில் வனப்பகுதியில் இருந்து பச்சை கிளிகளை பிடித்து வந்து பாலக்கரை பகுதியில் உள்ள வீடுகளில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு பாலக்கரை குருவிக்காரன்தெரு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினார்கள்.
அப்போது அந்த வீட்டில் கூண்டுகளில் அடைத்து பச்சை கிளிகள் வைத்திருந்தது தெரியவந்தது. இதேபோல் அருகே இருந்த மற்றொரு வீட்டிலும் கூண்டுகளில் பச்சை கிளிகள் அடைத்து வைக்கப்பட்டு இருந்தன.
இதையடுத்து மொத்தம் 300 பச்சை கிளிகளை வனத்துறையினர் அங்கிருந்து பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த ரியாஸ், ஆரிப் ஆகிய 2 பேரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் பச்சை கிளிகளை விற்பனை செய்வதற்காக வீடுகளில் பதுக்கி வைத்து இருந்தது தெரியவந்தது. இது குறித்து வனத்துறையினர் வழக்கு பதிவு செய்து, 2 பேருக்கும் தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும், பறிமுதல் செய்யப்பட்ட பச்சை கிளிகளை வனப்பகுதிக்கு கொண்டு சென்று விட்டனர்.