தேர்தல் டிக்கெட் மறுப்பு கட்சியின் உத்தரவை மதித்து நடப்போம் ஏக்நாத் கட்சே, வினோத் தாவ்டே சொல்கின்றனர்
மராட்டிய சட்டசபை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்ட விவகாரத்தில் கட்சியின் உத்தரவை மதித்து நடப்போம் என ஏக்நாத் கட்சே, வினோத் தாவ்டே ஆகியோர் தெரிவித்தனர்.
மும்பை,
மராட்டிய சட்டசபை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்ட விவகாரத்தில் கட்சியின் உத்தரவை மதித்து நடப்போம் என ஏக்நாத் கட்சே, வினோத் தாவ்டே ஆகியோர் தெரிவித்தனர்.
தேர்தல் டிக்கெட் மறுப்பு
மராட்டிய சட்டசபை தேர்தலில் ஆளும் பா.ஜனதா- சிவசேனா கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. பா.ஜனதா வெளியிட்ட வேட்பாளர் பட்டியல்களில் அக்கட்சியின் மூத்த தலைவரான ஏக்நாத் கட்சே, மாநில உயர் கல்வித்துறை மந்திரி வினோத் தாவ்டே பெயர் வெளியாகவில்லை.
இருவருக்கும் இந்த தேர்தலில் வாய்ப்பு மறுக்கப்பட்டு உள்ளது. இதனால் இருவரும் மிகுந்த அதிருப்தி அடைந்தனர்.
இது குறித்து ஏக்நாத் கட்சே நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
42 ஆண்டுகளாக...
கட்சியின் உத்தரவுகளைப் பின்பற்றும் தொண்டன் நான். கடந்த 42 ஆண்டுகளாக நான் கட்சியின் உத்தரவுக்கு கீழ்ப்படிந்து நடந்து வருகிறேன். என் விருப்பத்திற்கு மாறாக வந்த சில உத்தரவுகள் எனக்கு கசப்பாக இருந்திருக்கலாம், ஆனால் நான் உத்தரவுகளைப் பின்பற்றினேன்.
இந்த விவகாரத்திலும் கட்சி எடுக்கும் முடிவை நான் இனியும் மதித்து நடப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார். இந்தநிலையில், பா.ஜனதா சார்பில் முக்தாய்நகர் தொகுதி வேட்பாளராக ஏக்நாத் கட்சேயின் மகள் ரோகினி கட்சே அறிவிக்கப்பட்டார்.
வினோத் தாவ்டே
சட்டசபை தேர்தலில் தனக்கு சீட் வழங்காதது பற்றி வினோத் தாவ்டே கூறியதாவது:-
எதற்காக கட்சி எனக்கு சீட் கொடுக்க மறுத்தது என்பது குறித்து சுயபரிசோதனை செய்து வருகிறேன். இந்த முடிவு குறித்து கட்சியும் சிந்தனை செய்கிறது. ஆனால் யார் செய்தது சரி அல்லது தவறு என சிந்திப்பதற்கு இது தருணம் அல்ல. நான் பா.ஜனதாவின் விசுவாசி. நாடு மற்றும் சமுதாயத்தின் நலனே முக்கியம் என கலாசாரம் எனக்கு கற்றுகொடுத்து உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.