கோத்ருட் தொகுதியில் பா.ஜனதா தலைவர் சந்திரகாந்த் பாட்டீலை வீழ்த்த ஓரணியில் திரண்ட எதிர்க்கட்சிகள்

புனே கோத்ருட் தொகுதியில் போட்டியிடும் பா.ஜனதா மாநில தலைவர் சந்திரகாந்த் பாட்டீலை வீழ்த்த காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் நவநிர் மாண் சேனாவுடன் கைகோர்த்து உள்ளன.

Update: 2019-10-04 22:30 GMT
மும்பை, 

புனே கோத்ருட் தொகுதியில் போட்டியிடும் பா.ஜனதா மாநில தலைவர் சந்திரகாந்த் பாட்டீலை வீழ்த்த காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் நவநிர் மாண் சேனாவுடன் கைகோர்த்து உள்ளன.

சந்திரகாந்த் பாட்டீல்

மராட்டிய சட்டசபை தேர்தலில் பா.ஜனதா மாநில தலைவரும், மந்திரியுமான சந்திரகாந்த் பாட்டீல் புனேயில் உள்ள கோத்ருட் தொகுதியில் போட்டியிடுகிறார். கோலாப்பூரை சேர்ந்த சந்திரகாந்த் பாட்டீல் கோத்ருட்டில் போட்டியிடுவதற்கு முதலில் உள்ளூர் பா.ஜனதாவினரே அதிருப்தி தெரிவித்தனர். அவருக்கு எதிராக போஸ்டர்களையும் ஒட்டினார்கள்.

இந்த நிலையில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெற்று உள்ள சிறிய கட்சியான சுவாபிமானி சேத்காரி கட்சிக்கு கோத்ருட் தொகுதி ஒதுக்கப்பட்டு இருந்தது.

ஒரணியில் திரண்ட எதிர்க்கட்சிகள்

அந்த தொகுதியில் ராஜ்தாக்கரே தலைமையிலான நவநிர்மாண் சேனா கிஷோர் ஷிண்டே என்பவரை வேட்பாளராக களம் இறக்கி உள்ளது. இந்தநிலையில், சந்திரகாந்த் பாட்டீலை வீழ்த்துவதற்கு எதிர்க்கட்சிகள் கோத்ருட் தொகுதியில் ஓரணியில் திரண்டு உள்ளன. நவநிர்மாண் சேனாவுடன் கொள்கை அளவில் வேறுபட்டாலும், முன் எப்போதும் அந்த கட்சியுடன் கூட்டணி வைக்க விரும்பாத காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சியான தேசியவாத காங்கிரஸ் அந்த கட்சிக்கு ஆதரவை தெரிவித்து உள்ளன.

எதிர்க்கட்சி வேட்பாளர்கள் தனித்தனியாக களத்தில் இருந்தால் வாக்குகள் பிரிந்து அது சந்திரகாந்த் பாட்டீலின் வெற்றிக்கு வழியை ஏற்படுத்தி விடக்கூடாது என்பதற்காக இந்த முடிவை காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் எடுத்து உள்ளன.

வேட்பு மனு

இந்தநிலையில், கோத்ருட் தொகுதியில் தனது பலத்தை காண்பிப்பதற்காக கிஷோர் ஷிண்டே பெரும் கூட்டத்துடன் ஊர்வலமாக சென்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.

மேலும் தனக்கு ஆதரவு தெரிவித்து உள்ள காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு நன்றியை தெரிவித்தார்.

மேலும் செய்திகள்