ஆரேகாலனியை வனப்பகுதியாக அறிவிக்க கோரிய மனுக்கள் தள்ளுபடி ஐகோர்ட்டு உத்தரவு

ஆரேகாலனியை வனப்பகுதியாக அறிவிக்க கோரிய மனுக்களை மும்பை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.

Update: 2019-10-04 22:30 GMT
மும்பை, 

ஆரேகாலனியை வனப்பகுதியாக அறிவிக்க கோரிய மனுக்களை மும்பை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.

மரங்களை வெட்ட எதிர்ப்பு

கோரேகாவில் உள்ள ஆரேகாலனி மும்பை பெருநகரின் பசுமை நுரையீரலாக உள்ளது. இங்கு மூன்றாவது மெட்ரோ ரெயில் திட்டத்தின் பணிமனை அமைப்பதற்காக 2 ஆயிரத்து 656 மரங்களை வெட்டுவதற்கு மும்பை மெட்ரோ ரெயில் கழகத்துக்கு மும்பை மாநகராட்சி அனுமதி அளித்து உள்ளது.

இதற்கு பிரபலங்களும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில், ஆரேகாலனியை வனப்பகுதியாக அறிவிக்க கோரி தொண்டு நிறுவனங்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சார்பில் மும்பை ஐகோர்ட்டில் நான்கு பொதுநலன் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்கள் மீதான விசாரணை தலைமை நீதிபதி பிரதீப் நந்திரஜோக், நீதிபதி பாரதி டாங்கரே ஆகியோர் கொண்ட அமர்வு முன் நடந்து வந்தது.

மனுக்கள் தள்ளுபடி

இந்த நிலையில், நேற்று ஆரேகாலனியை வனப்பகுதியாக அறிவிக்க முடியாது என்றும், மரங்களை வெட்ட மெட்ரோ ரெயில் கழகத்துக்கு மாநகராட்சி அளித்த அனுமதியை ரத்து செய்ய முடியாது என்றும் அந்த நான்கு மனுக்களையும் நீதிபதிகள் அதிரடியாக தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

இந்த பிரச்சினை தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டு மற்றும் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் நிலுவையில் இருக்கிறது. எனவே மனுக்களை தள்ளுபடி செய்வதாக நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்