உள்ளாட்சி தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் - கலெக்டர் மெகராஜ் வெளியிட்டார்
உள்ளாட்சி தேர்தலுக்கான புகைப்படத்துடன் கூடிய இறுதி வாக்காளர் பட்டியலை நாமக்கல் மாவட்ட கலெக்டர் மெகராஜ் நேற்று வெளியிட்டார்.
நாமக்கல்,
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்பேரில் உள்ளாட்சி தேர்தலுக்கான புகைப்படத்துடன் கூடிய இறுதி வாக்காளர் பட்டியல் நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று வெளியிடப்பட்டது. அப்போது நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 5 நகராட்சிகள், 15 ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் 19 பேரூராட்சிகளின் வார்டு வாரியான வாக்காளர் பட்டியலை கலெக்டர் மெகராஜ் வெளியிட்டார். அதை நாமக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் மலர்விழி, நகராட்சி ஆணையாளர் சுதா மற்றும் அரசு அதிகாரிகள் பெற்றுக்கொண்டனர். அதைத்தொடர்ந்து நிருபர்களிடம் பேட்டி அளித்த கலெக்டர் மெகராஜ் கூறியதாவது:-
பெயர் சேர்த்தல், நீக்கலுக்கான காலம் முடிந்துவிட்டது. தற்போது சிறப்பு சுருக்கத்திருத்தம் நடந்து வருகிறது. அதில் சேர்க்கப்படும் கூடுதல் வாக்காளர்களின் பட்டியல் பின்னர் வெளியிடப்படும். தற்போது உள்ளாட்சி தேர்தலுக்கான புகைப்படத்துடன் கூடிய இறுதி வாக்காளர் பட்டியல் இன்று (நேற்று) வெளியிடப்பட்டு உள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் 6 லட்சத்து 87 ஆயிரத்து 510 ஆண் வாக்காளர்கள், 7 லட்சத்து 19 ஆயிரத்து 619 பெண் வாக்காளர்கள் மற்றும் 127 திருநங்கை வாக்காளர்கள் என மொத்தம் 14 லட்சத்து 7 ஆயிரத்து 256 வாக்காளர்கள் உள்ளனர். மேலும் 2 ஆயிரத்து 369 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளது. ஏற்கனவே உள்ள பதட்டமான வாக்குச்சாவடிகளின் பட்டியலோடு, மேலும் உள்ள பதட்டமான வாக்குச்சாவடிகளின் பட்டியலும் உள்ளாட்சி அமைப்புகளிடம் கேட்கப்பட்டு உள்ளது. அது விரைவில் இறுதி செய்யப்படும்.
இவ்வாறு கலெக்டர் மெகராஜ் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் பால்பிரின்ஸ்லி ராஜ்குமார் (பொது), ஹசினா பேகம் (வளர்ச்சி), கோவிந்தராஜன் (உள்ளாட்சி தேர்தல்) உள்பட அரசு துறை அலுவலர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இதற்கிடையே வாக்காளர் பட்டியல் வெளியீட்டிற்காக அழைக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் புறக்கணிக்கப்பட்டதாக தி.மு.க. நாமக்கல் மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் சுகுமார் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் தங்கமணி ஆகியோர் கலெக்டர் மெகராஜிடம் புகார் தெரிவித்தனர்.
பொதுவாக வாக்காளர் பட்டியல் வெளியீட்டின்போது அரசியல் கட்சி பிரமுகர்களிடம் வாக்காளர் பட்டியல் வழங்கப்படுவது வழக்கம் என்றும், ஆனால் தற்போது அரசியல் கட்சியினருக்கு பட்டியல் வழங்கப்படவில்லை எனவும் அவர்கள் கூறினர். அதற்கு இனிவரும் காலங்களில் இதுபோன்ற சம்பவம் நடைபெறாது என அரசியல் கட்சியினரிடம் கலெக்டர் மெகராஜ் தெரிவித்தார்.