குருடுமலை விநாயகர் கோவிலுக்கு வந்தபோது மாற்றுத்திறனாளி வாலிபரிடம் குறைகளை கேட்ட நளின்குமார் கட்டீல்
குருடுமலை விநாயகர் கோவிலுக்கு வந்தபோது, தன்னை சந்திக்க காத்திருந்த மாற்றுத்திறனாளி வாலிபரிடம் நளின் குமார் கட்டீல் குறைகளை கேட்டறிந்தார்.
கோலார் தங்கவயல்,
குருடுமலை விநாயகர் கோவிலுக்கு வந்தபோது, தன்னை சந்திக்க காத்திருந்த மாற்றுத்திறனாளி வாலிபரிடம் நளின் குமார் கட்டீல் குறைகளை கேட்டறிந்தார்.
நளின்குமார் கட்டீல் சாமி தரிசனம்
கோலார் மாவட்டம் முல்பாகலில் பிரசித்தி பெற்ற குருடுமலை விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு நேற்று கர்நாடக மாநில பா.ஜனதா தலைவரும், தட்சிண கன்னடா தொகுதி எம்.பி.யுமான நளின்குமார் கட்டீல் வந்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் முல்பாகல் தாலுகா பா.ஜனதாவினரும் அவரை வரவேற்றனர்.
இதையடுத்து குருடுமலை விநாயகர் கோவிலில் நளின்குமார் கட்டீல் சிறப்பு பூஜை செய்து வழிபட்டார். அப்போது, நளின்குமார் கட்டீலை சந்திப்பதற்காக மாற்றுத்திறனாளி வாலிபர் ஒருவர் 2 மணி நேரமாக காத்திருப்பதாக அவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
குறைகளை கேட்டார்
இதனை அறிந்த நளின் குமார் கட்டீல், தன்னை சந்திக்க காத்திருந்த மாற்றுத்திறனாளி வாலிபரை சந்தித்து பேசினார்.
அப்போது நளின்குமார் கட்டீலுக்கு அந்த வாலிபர் மாலை அணிவித்தார். பின்னர் அந்த மாலையை நளின்குமார் கட்டீல், மாற்றுத்திறனாளி வாலிபருக்கு அணிவித்தார்.
அதன்பின்னர், மாற்றுத்திறனாளி வாலிபரிடம் நளின்குமார் கட்டீல் குறைகளை கேட்டறிந்து கொண்டார். அந்த குறைகளை தீர்க்க நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி அளித்தார்.