மாவட்டத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை அரசு முதன்மை செயலாளர் ஆய்வு

சேலம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை அரசு முதன்மை செயலாளர் முகமது நசிமுதீன் ஆய்வு செய்தார்.

Update: 2019-10-03 22:15 GMT
சேலம், 

சேலம் மாவட்டம் ஓமலூர், நங்கவள்ளி மற்றும் எடப்பாடி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் பல்வேறு துறைகளின் சார்பில் வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை அரசு முதன்மை செயலாளர் முகமது நசிமுதீன், கலெக்டர் ராமன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

ஓமலூர் ஊராட்சி ஒன்றியம் சிக்கம்பட்டி ஊராட்சியில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் உண்ணாமலை குட்டை ஏரி புனரமைக்கப்பட்டு வருவதையும், நங்கவள்ளி ஊராட்சி ஒன்றியத்தில் கட்டப்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடத்தினையும், எடப்பாடி மற்றும் கொங்கணாபுரம் ஊராட்சி ஒன்றியங்களில் 51 புதிய குடியிருப்புகளுக்கான கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளதையும், நங்கவள்ளி ஊராட்சி ஒன்றியம் தெற்கத்தியானூரில் அமைக்கப்பட்டு உள்ள வேளாண் பொருட்கள் மதிப்பு கூட்டு எந்திர கூடத்தினையும் ஆய்வு செய்தனர்.

மேலும் எடப்பாடி ஊராட்சி ஒன்றியம், செட்டிமாங்குறிச்சி பனங்காட்டில் மரம் நடும் திட்டத்தையும், குடிமராமத்து திட்டத்தின் கீழ் புது ஏரி புனரமைக்கப்பட்டு வருவதையும் பார்வையிட்டனர்.மொத்தம் ரூ.3 கோடியே 77 லட்சத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, வளர்ச்சி திட்ட பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என அலுவலர்களுக்கு முதன்மை செயலாளர் அறிவுரை வழங்கினார்.

எடப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் புறநோயாளிகள் அறை, ஆய்வகம், மருந்தகம், படுக்கை அறை, காய்ச்சல் பிரிவு, உயிர்காக்கும் மருந்துகள் இருப்பு குறித்து ஆய்வு செய்யப்பட்டு, ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகளுக்கு பரிசோதனை மேற்கொண்டு நோயின் தன்மைகேற்ப உடனடி சிகிச்சை மேற்கொள்ள மருத்துவர்களுக்கு அறிவுரை வழங்கினார். இந்த ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் அருள்ஜோதி அரசன், உதவி இயக்குனர் கோபிநாத், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்பட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்