குமாரபாளையத்தில் 2-வது கணவரை ஆற்றில் தள்ளிவிட்டதாக கள்ளக்காதலன் மீது பெண் புகார் - போலீசார் விசாரணை
குமாரபாளையத்தில் 2-வது கணவரை ஆற்றில் தள்ளிவிட்டதாக கள்ளக்காதலன் மீது பெண் புகார் தெரிவித்தார். இதன்பேரில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் தரப்பில் கூறப்பட்டதாவது:-
குமாரபாளையம்,
குமாரபாளையம் ஏரித்தெருவில் வசித்து வந்தவர் வெங்கடேசன் (வயது 33). விசைத்தறி தொழிலாளி. இவரது மனைவி செல்வி (33). இவருக்கு வெங்கடேசன் 2-வது கணவர் ஆவார். செல்விக்கு முதல் கணவருடன் ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
இதற்கிடையில் செல்விக்கும், குமாரபாளையம் காவேரி நகர் காந்தியடிகள் தெருவை சேர்ந்த பெருமாள் என்பவருக்கும் தொடர்பு ஏற்பட்டது. அவர் அடிக்கடி செல்வியை தனிமையில் சந்தித்து வந்தார். இதையறிந்த வெங்கடேசன் இருவரையும் கண்டித்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த மாதம் 18-ந் தேதி முதல் வெங்கடேசனை காணவில்லை. இதுகுறித்து அக்கம், பக்கத்தினர் செல்வியிடம் கேட்டு வந்துள்ளனர். இந்நிலையில் செல்வி குமாரபாளையம் போலீசில் சரணடைந்தார். அப்போது அவர் கடந்த மாதம் எனது கணவர் காவிரி ஆற்றுக்கு குளிக்க சென்றபோது அவரை பெருமாள் ஆற்றில் தள்ளி விட்டு விட்டதாக கூறியுள்ளார்.
இதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார் காவிரி ஆற்றில் வெங்கடேசனை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அவர் என்ன ஆனார்? என்பது தெரியவில்லை. இதற்கிடையில் பெருமாளை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 2-வது கணவரை ஆற்றில் தள்ளிவிட்டதாக கள்ளக்காதலன் மீது பெண் புகார் தெரிவித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.