வேளாண் எந்திரங்களை வாடகைக்கு விடும் மையம் அமைக்க விவசாயிகளுக்கு மானியம் கலெக்டர் தகவல்

வேளாண் எந்திரங்களை வாடகைக்கு விடும் மையம் அமைக்க விவசாயிகளுக்கு 40 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது என்று திருச்சி மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு தெரிவித்துள்ளார்.

Update: 2019-10-03 22:45 GMT
திருச்சி,

வேளாண் பணியாளர்கள் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு மாநில அரசு வேளாண் எந்திரமாக்குதல் திட்டத்திற்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. அதிக விலையுள்ள வேளாண் எந்திரங்களை வாங்க இயலாத விவசாயிகளின் நலன்கருதி, வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகள் வாடகை மையங்கள் அமைக்கும் திட்டத்திற்கு அதிக நிதி ஒதுக்கி ஊக்குவித்து வருகிறது.

சிறு மற்றும் குறு விவசாயிகள் அதிக விலையுள்ள வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகளை சொந்தமாக வாங்கி பயன்படுத்த இயலாததை கருத்தில் கொண்டு, அவற்றை குறைந்த வாடகையில் பெற்று பயனடைய ஏதுவாக வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் வட்டார அளவிலான வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகள் வாடகை மையம் அமைக்கப்பட உள்ளன. திருச்சி மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் தலா ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் 4 இடங்களில் இந்த மையங்கள் அமைக்க அரசு நிதி ஒதுக்கி உள்ளது. இதற்காக ஒரு மையத்துக்கு 40 சதவீதம் மானியம் என்ற அடிப்படையில் அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை மானியம் வழங்கப்படும்.

விண்ணப்பம்

இந்த மையங்களை அமைக்க விவசாயிகள், விவசாய சுய உதவி குழுக்கள் மற்றும் தொழில்முனைவோர், திருச்சி மாவட்டத்தில் உள்ள உதவி செயற்பொறியாளர் (வேளாண் பொறியியல்) அலுவலகத்தில் விண்ணப்பங்களை அளிக்க வேண்டும். அவ்வாறு வரப்பெற்ற விண்ணப்பங்கள் அனைத்தும் பதிவேட்டில் பதியப்பட்டு, பதிவுமூப்பு அடிப்படையில் விண்ணப்பதாரர்களுக்கு தகவல் அளிக்கப்படும்.

விவசாயிகள் குழுக்கள் தமக்குத் தேவையான வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகளின் மொத்த தொகை சம்பந்தப்பட்ட வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகளின் நிறுவனங்கள் ஒப்புதல் அளித்துள்ள முகவர்களிடம் வரைவோலையாக சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் பெயரில் செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்திய வரைவோலையின் நகலை உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் அளித்தவுடன், மாவட்ட செயற்பொறியாளரால் வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகளின் முகவருக்கு உரிய வழங்கல் ஆணை வழங்கப்பட்டு, அந்த மையத்துக்கு, முகவரால் வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகள் அனைத்தும் வழங்கப்படும்.

இந்த தகவலை திருச்சி மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்