ஆழ்வார்திருநகரியில் காமராஜருக்கு வெண்கல சிலை அமைக்க அனுமதி
ஆழ்வார்திருநகரியில் பழுதடைந்த காமராஜர் சிலைக்கு பதிலாக புதிதாக வெண்கல சிலை அமைக்க அனுமதி வழங்கப்பட்டது.
தென்திருப்பேரை,
ஆழ்வார்திருநகரி பஜாரில் கடந்த 1988-ம் ஆண்டு அகில இந்திய இளம் தமிழர் மன்றம் சார்பில் காங்கிரீட்டாலான காமராஜர் சிலை அமைக்கப்பட்டது. இந்த சிலை பழுதடைந்த நிலையில் உள்ளதால், அதற்கு பதிலாக காமராஜருக்கு வெண்கல சிலை அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்க காலம் தாழ்த்தியதால், காமராஜர் நினைவு தினமான நேற்று முன்தினம் ஆழ்வார்திருநகரியில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
இந்த நிலையில் ஆழ்வார்திருநகரியில் பழுதடைந்த காமராஜர் சிலைக்கு பதிலாக, வெண்கலத்தாலான காமராஜர் சிலை அமைக்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனுமதி வழங்கினார்.இதற்கான உத்தரவு கடிதத்தினை தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மாலையில் மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி, சண்முகநாதன் எம்.எல்.ஏ.விடம் வழங்கினார்.