நாட்டார் கால்வாய் தூர் வாரும் பணி - அமைச்சர் தொடங்கி வைத்தார்

நாட்டார் கால்வாய் தூர் வாரும் பணியை அமைச்சர் பாஸ்கரன் தொடங்கி வைத்தார்.

Update: 2019-10-03 22:00 GMT
மானாமதுரை, 

மானாமதுரை வைகை ஆற்றில் கிருங்காக்கோட்டை என்ற இடத்தில் இருந்து ராஜகம்பீரம் புதூர், வளநாடு, கிளங்காட்டூர் உள்பட 16 கிராமமக்கள் பயன்பெறும் வகையில் நாட்டார் கால்வாய் திட்டம் செயல்படுத்தப்பட்டது. அதன்பின் 30 ஆண்டுகளாக கால்வாய் பராமரிப்பின்றி கருவேல மரங்கள் அடர்ந்து புதர் மண்டியதால், மழை காலங்களில் தண்ணீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே நாட்டார் கால்வாயை துார்வாரி வைகை தண்ணீர் திறக்கப்பட வேண்டும் என நாட்டார் கால்வாய் பாசன சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் தொடர்ந்து போராடினர்.

அதன்பேரில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாட்டார் கால்வாயை தூர் வார நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். அதைத்தொடர்ந்து முதல் கட்டமாக ரூ.20 லட்சம் செலவில் நாட்டார் கால்வாய் தூர் வாரும் பணியை அமைச்சர் பாஸ்கரன் தொடங்கி வைத்தார். இதில் கலெக்டர் ஜெயகாந்தன், மாவட்ட செயலாளர் செந்தில்நாதன், நாகராஜன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. குணசேகரன், இளையான்குடி ஒன்றிய செயலாளர் பாரதிராஜன், முன்னாள் யூனியன் சேர்மன் மாரிமுத்து, முன்னால் ஒன்றிய செயலாளர் ஜெயபிரகாஷ், வட்டார வளர்ச்சி அலுவலர் பத்மநாபன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக நாட்டார் கால்வாய் வரைபடத்தை அமைச்சர் பார்வையிட்டார்.

நாட்டார் கால்வாய் பாசன சங்க நிர்வாகிகள் கூறுகையில், நாட்டார் கால்வாயில் தண்ணீர் வரத்து இல்லாததால் 16 கிராமமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாயம் இல்லாததால் பலரும் ஊரைவிட்டு வெளியேறி விட்டனர். நிலத்தடி நீர் வெகு கீழே போய்விட்டதால் சுவையும் நிறமும் மாறிவிட்டது. வைகை ஆற்றில் இருந்து நாட்டார் கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டால் இந்த பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதுடன் குடிநீர் தட்டுப்பாடும் நீங்கும். எங்களின் கோரிக்கையை ஏற்று தூர் வாரும் பணி தொடங்கப்பட்டுள்ளது என்றனர். 

மேலும் செய்திகள்