மோடியை கடவுளாக நினைத்து பூஜை செய்யட்டும் நிவாரணம் கேட்க பா.ஜனதா எம்.பி.க்களுக்கு தைரியம் இல்லை பரமேஸ்வர் தாக்கு

பிரதமரிடம் நிவாரணம் கேட்க பா.ஜனதா எம்.பி.க்களுக்கு தைரியம் இல்லை என்று பரமேஸ்வர் தெரிவித்துள்ளார்.

Update: 2019-10-03 22:30 GMT
பெங்களூரு, 

பிரதமரிடம் நிவாரணம் கேட்க பா.ஜனதா எம்.பி.க்களுக்கு தைரியம் இல்லை என்று பரமேஸ்வர் தெரிவித்துள்ளார்.

பிரதாப் சிம்ஹாவுக்கு எதிர்ப்பு

கர்நாடகத்தில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நிவாரண பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு நிவாரணம் வழங்கவில்லை என்றும், மழை பாதித்த பகுதிகளை பிரதமர் மோடி பார்வையிடவில்லை என்றும் காங்கிரஸ் தலைவர்கள் குற்றச்சாட்டு கூறி வருகின்றனர். இதுகுறித்து மைசூருவில் பிரதாப் சிம்ஹா எம்.பி. நிருபர்களிடம் கூறுகையில், ‘மாநிலத்தில் மழை பாதித்த பகுதிகளுக்கு மத்திய அரசு கூடிய விரைவில் நிவாரணம் வழங்கும். பிரதமர் மோடி கடவுளை போன்றவர். அவரை திட்டுவது கடவுளை திட்டுவதாகும்‘ என்று கூறி இருந்தார்.

பிரதாப் சிம்ஹா பேசியதற்கு காங்கிரஸ் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பெங்களூருவில் நேற்றுமுன்தினம் முன்னாள் துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

எம்.பி.க்களுக்கு தைரியம் இல்லை

பிரதமர் மோடி பா.ஜனதாவினருக்கு கடவுளாக தெரிவார். பா.ஜனதாவினருக்கு மோடி கடவுளாகவே இருக்கட்டும். மோடியை கடவுளாக நினைத்து பூஜை செய்யட்டும். அதை பற்றி யாருக்கும் எந்த பிரச்சினையும் இல்லை. மாநிலத்தில் பல மாவட்டங்கள் மழை, வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் வீடுகளை இழந்து வீதிக்கு வந்துள்ளனர். மழை பாதித்த பகுதிகளில் நிவாரண பணிகளை மேற்கொள்ள இன்னும் மத்திய அரசு நிவாரணம் வழங்கவில்லை. பீகார் மாநிலத்திலும் மழை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அந்த மாநிலத்திற்கு தேவையான உதவிகளை செய்வதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலத்தை புறக்கணிப்பது ஏன்?. மழை நிவாரணம் வழங்காமல் நமது மாநிலத்தை மத்திய அரசு வஞ்சிக்கிறது. அதுபற்றி பா.ஜனதாவினர் யாரும் பேசுவதில்லை. பிரதமர் மோடியை புகழ்ந்து பேசி வருகின்றனர். மழையால் பாதித்த பகுதிகளில் நிவாரணம் வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் கேட்க கர்நாடகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 25 எம்.பி.க்களுக்கு தைரியம் இல்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வாங்கி கொடுக்க முடியாமல், பிரதாப் சிம்ஹா உள்ளிட்டோர் பேசுவது சரியல்ல. பா.ஜனதாவினருக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.

இவ்வாறு பரமேஸ்வர் கூறினார்.

மேலும் செய்திகள்