ஆன்-லைனில் விளம்பரத்தை பார்த்து டாக்டரிடம் நூதன முறையில் செல்போன் பறித்தவர் கைது
ஆன்-லைனில் விளம்பரத்தை பார்த்து டாக்டரிடம் நூதனமுறையில் செல்போன் பறித்தவரை போலீசார் கைது செய்தனர்.
பூந்தமல்லி,
சென்னை முகப்பேரை சேர்ந்தவர் விக்னேஷ் ராஜ். டாக்டரான இவர், தனது விலை உயர்ந்த செல்போனை விற்பனை செய்வதாக ஆன்-லைனில் விளம்பரம் செய்திருந்தார். அதை பார்த்த அரிபிரசாத் என்பவர், அந்த செல்போனை தான் வாங்கி கொள்வதாக கூறி முகப்பேர் மேற்கு பகுதியில் உள்ள உணவகத்துக்கு ஒரு பெண்ணுடன் வந்தார்.
அவரிடம் டாக்டர் விக்னேஷ் ராஜ், தனது செல்போனை கொடுத்தார். அதனை பரிசோதனை செய்துவிட்டு வருவதாக கூறிய அரிபிரசாத், அதுவரை அருகில் அமர்ந்து உள்ள தனது அக்காவிடம் பேசிக்கொண்டு இருக்கும்படி கூறிவிட்டு வெளியே சென்றார். நீண்டநேரம் ஆகியும் திரும்பி வரவில்லை.
அந்த பெண்ணிடம் கேட்டபோது, அவர் யார் என்றே தெரியாது. ஒரு வேலை விஷயமாக வரும்படி கூறியதாக தெரிவித்தார். அதன்பிறகுதான் மர்மநபர் தன்னிடம் நூதன முறையில் செல்போனை பறித்து சென்றது டாக்டர் விக்னேஷ் ராஜ்க்கு தெரிந்தது.
இதுகுறித்து அம்பத்தூர் எஸ்டேட் போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து மேடவாக்கத்தில் பதுங்கி இருந்த அரிபிரசாத்தை கைது செய்தனர்.
திருவொற்றியூரைச் சேர்ந்த அரிபிரசாத், சரியான வேலை இல்லாததால் திருடுவது, வழிப்பறி, ஆள்கடத்தல் உள்ளிட்ட குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு கைதாகி சிறைக்கு சென்றவர் என்பதும், ஆன்-லைனில் விளம்பரம் செய்பவர்களை குறி வைத்து இதே பாணியில் நூதன முறையில் மோசடியில் ஈடுபட்டதும் தெரிந்தது.
அவரிடமிருந்து 8 பவுன் நகைகள் மற்றும் ரூ.90 ஆயிரம் மதிப்புள்ள உயர்ரக செல்போன்களை பறிமுதல் செய்த போலீசார், கைதான அரிபிரசாத்தை சிறையில் அடைத்தனர்.