குடிமராமத்துக்கு வழங்கப்படும் தொகைகளுக்கு சரியான முறையில் பணிகள் மேற்கொள்ள வேண்டும்

குடிமராமத்து பணிகளுக்கு வழங்கப்படும் தொகைகளுக்கு சரியான முறையில் பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்று குறைதீர்வு நாள் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2019-10-02 22:15 GMT
கீழ்பென்னாத்தூர்,

கீழ்பென்னாத்தூர் வட்டார வேளாண் விரிவாக்க மையத்தில் விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு வட்டார வேளாண் உதவி இயக்குனர் சீனுவாசன் தலைமை தாங்கினார். தாசில்தார் ராமபிரபு, வட்ட வழங்கல் அலுவலர் தனபால், கால்நடை உதவி மருத்துவர் ஜெயக்குமார், ராஜ் சுகர்மில் கரும்பு அலுவலர் மணிகண்டன், நில அளவை பிரிவு அலுவலர் கமலகன்னி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார வேளாண் அலுவலர் பிரியங்கா வரவேற்றார்.

கூட்டத்தில் விவசாய சங்க பிரதிநிதிகள் வயலூர் சதாசிவம், முத்தகரம் பழனிச்சாமி, வரதராஜன், ஞானசேகர், சிவக்குமார், கேசவன், சுப்பராயன் உள்பட பலரும் கலந்துகொண்டு பேசினர். அப்போது விவசாயிகள் பேசியதாவது:-

கரும்பு விவசாயிகளுக்கு 10 மாதங்களாக வழங்க வேண்டிய நிலுவைத்தொகை வழங்க வேண்டும். கீரனூர் கிராமத்தில் 1967-ம் ஆண்டு அமைக்கப்பட்ட நந்தன்கால்வாய் திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள ஏரிகள் நிரம்பவும், விவசாய பாசனத்திற்காகவும் பயன்பட்டு வந்தது. நாளடைவில் பராமரிப்பு இல்லாமலும், செடி, கொடிகளாலும் அடர்ந்து காணப்படுவதால் கால்வாய் முழுவதும் அடைப்பு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக தற்போது பெய்து வரும் மழையினால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 80 சதவீத தண்ணீர் கோணலூர் பாலம் வழியாக பெருமணம் ஏரியில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் கலந்து கடலில் வீணாக கலக்கிறது.

கிராமப்புறங்களில் ஆவின் நிறுவனம் மூலம் கொள்முதல் செய்யப்படும் பால் உற்பத்தியாளர்களுக்கு பணப்பட்டுவாடா தாமதமின்றி வழங்க வேண்டும். கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பு ஊசி போட வேண்டும். மழை காலங்களில் நோய் தாக்கும் முன்பாக நில வேம்பு கசாயம் வழங்க வேண்டும். விவசாயிகள் காப்பீடு தொகை கிடைக்க பெறாதவர்களுக்கு உடனடியாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தூய்மை காவலர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும்.

ஊராட்சி செயலாளர்களை 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை பணியிட மாற்றம் செய்ய வேண்டும். விவசாயிகள் கேட்கும் அளவிற்கு மட்டுமே நெல் விதை வழங்க வேண்டும். ஏரிகள், குளங்களில் நடைபெற்று வரும் குடிமராமத்து பணிகளுக்கு வழங்கப்படும் தொகைகளுக்கு சரியான முறையில் பணிகள் மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர்கள் பேசினர்.

மேலும் செய்திகள்