பிளாஸ்டிக் இல்லாத இந்தியா விழிப்புணர்வு ஊர்வலம்

காந்தி ஜெயந்தியையொட்டி பிளாஸ்டிக் இல்லாத இந்தியா விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தப்பட்டது.

Update: 2019-10-02 22:15 GMT
ராஜபாளையம், 

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளை யொட்டி சிவகாசி நகராட்சி அலுவலகத்தில் காந்தி உருவ படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அதே போல் பெருந்தலைவர் காமராஜர் நினைவு நாளை யொட்டி அவரது படத்துக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து தூய்மை பாரத திட்டத்தின் கீழ் பிளாஸ்டிக் இல்லாத இந்தியா என்ற விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தப்பட்டது.

நகராட்சி அலுவலகத்தில் இருந்து தொடங்கிய ஊர்வலம் நகரின் முக்கிய பகுதி வழியாக சென்று பின்னர் நகராட்சி அலுவலகம் வந்தடைந்தது. இந்த ஊர்வலத்தை நகராட்சி கமிஷனர் பார்த்தசாரதி கொடியசைத்து தொடங்கி வைத்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிராஜுதீன் ,நகராட்சி சுகாதார அலுவலர் பேச்சிமுத்து, சிவகாசி இன்னர்வீல் சங்க தலைவி பாண்டிவீரலட்சுமி, பொருளாளர் பீயூலாராஜாத்தி, ஞானவாணி மற்றும் சிவகாசி அரசு கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் கணேசமுருகன் மற்றும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

ராஜபாளையம் நகராட்சி சார்பாக பிளாஸ்டிக் இல்லா ராஜபாளையம் என்ற கருத்தினை வலியுறுத்தி மனித சங்கிலி விழிப்புணர்வு நிகழ்ச்சி நகராட்சி ஆணையாளர் ஜோதிகுமார் தலைமையில் நடந்தது. நகர்நல அலுவலர் டாக்டர் சரோஜா முன்னிலை வகித்தார். மனித சங்கிலி நிகழ்ச்சியில் தொழில் வர்த்தக சங்கத்தினர், முகநூல் நண்பர்கள் அமைப்பு, நேரு யுவகேந்திரா, பசுமை பாரத இயக்கம், ராஜூக்கள் கல்லூரி மாணவர்கள், சூரன் நர்சிங் கல்லூரி மாணவர்கள் மற்றும் பல தன்னார்வ தொண்டு நிறுவனத்தை சேர்ந்த 600-க்கும் மேற்பட்டோர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து காந்தி சிலை வரை ரோட்டின் இருபுறமும் கைகோர்த்து நின்றதோடு பிளாஸ்டிக் ஒழிப்பு உறுதிமொழியும் எடுத்துக்கொண்டனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளர்கள் காளி, மாரிமுத்து, பழனிச்சாமி ஆகியோர் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்