திம்மம்பட்டி ஊராட்சியில் நடந்த கிராமசபை கூட்டத்தை பொதுமக்கள் புறக்கணிப்பு

திம்மம்பட்டி ஊராட்சியில் நடந்த கிராமசபை கூட்டத்தை பொதுமக்கள் புறக்கணித்தனர்.

Update: 2019-10-02 23:00 GMT
தோகைமலை,

குளித்தலை அருகே திம்மம்பட்டி ஊராட்சியில் நேற்று காந்தி ஜெயந்தியையொட்டி கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ஒன்றிய பற்றாளர் கண்ணையா பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். அப்போது கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பாக ஊராட்சி செயலாளர் சக்திதாசனுக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் மங்கையர்கரசி சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் பொதுமக்கள் கொடுத்த மனுவின் மீதும், சரியான பதில் அளிக்காத ஊராட்சி செயலாளர் மீது நடவடிக்கை எடுப்பதாக அதிகாரி உறுதியளித்தார். இதையடுத்து வட்டார வளர்ச்சி அலுவலர் மங்கையர்கரசி தலைமையில் சிறப்பு கிராமசபை கூட்டம் நடந்து முடிந்தது.

வாக்குவாதம்

இதேபோல தரகம்பட்டி அருகே உள்ள கடவூர் ஊராட்சி தேக்கமலைகோவில்பட்டியில் கிராம சபை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் கலந்து கொண்ட வாலிபர்கள் சிலர் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு அலுவலரிடம் கூறினர். அப்போது திடீரென உள்ளே நுழைந்த சில தொலைக்காட்சி நிருபர்கள், அந்த கூட்டத்தில் நடந்த வாக்குவாதங்களை படம் எடுத்தனர். இதனை துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கோபாலகிருஷ்ணன் தடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் நிருபர்களுக்கும், வட்டார வளர்ச்சி அலுவலருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து கூட்டம் விரைவாக நடத்தி முடிக்கப்பட்டது.

கலெக்டர் பங்கேற்பு

கரூர் வாங்கல் குப்புச்சிபாளையம் ஊராட்சியில் உள்ள பசுபதிபாளையத்தில் கிராமசபை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் சிறப்பு பார்வையாளராக மாவட்ட கலெக்டர் அன்பழகன் கலந்து கொண்டார். கூட்டத்தில், அரசால் தடைவிதிக்கப்பட்ட பிளாஸ் டிக் பயன்பாட்டை தவிர்ப்பது தொடர்பாக பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. பின்னர் கிராமங்களை சுத்தமாக வைத்து கொள்ளவும். பிளாஸ் டிக் பொருட் களை பயன்படுத்தாமல் இருக்க வேண்டும் என உறுதிமொழி எடுத்து கொள்ளப்பட்டது. இதில் வருவாய் கோட்டாட்சியர் சந்தியா, ஊராட்சிகளின் உதவி இயக்குனர் உமாசங்கர், இணை இயக்குனர்கள் வளர்மதி (வேளாண் மை), ராதா கிருஷ்ணன் (கால்நடை) உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்