சிக்கமகளூரு அருகே, திருமணம் செய்த சிறிது நேரத்தில் காதல் ஜோடி தற்கொலை
சிக்கமகளூரு அருகே, திருமணம் செய்த சிறிது நேரத்தில் காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்டனர்.
சிக்கமகளூரு,
சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே தாலுகா கோணிபீடு பகுதியை சேர்ந்தவர் நூத்தன்(வயது 25). அதேப்பகுதியை சேர்ந்தவர் அபூர்வா(22). இந்த நிலையில் கடந்த ஓராண்டு முன்பு நூத்தனுக்கும், அபூர்வாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் தீவிரமாக காதலித்து வந்தனர்.
இதற்கிடையே இவர்களது காதல் விவகாரம் இருவீட்டாருக்கும் தெரியவந்தது. அவர்கள் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும் காதல் ஜோடி தங்களது காதலில் உறுதியாக இருந்தனர்.
இந்த நிலையில் நூத்தனும், அபூர்வாவும் நேற்று முன்தினம் காலை வீட்டைவிட்டு வெளியேறினார்கள். மேலும் நண்பர்கள் உதவியுடன் சிக்கமகளூருவில் உள்ள ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர்.
ஆனாலும் தங்களது திருமணத்தை பெற்றோர் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று நினைத்த நூத்தனும், அபூர்வாவும் தற்கொலை செய்ய முடிவு செய்தனர். அதன்படி திருமணம் செய்த சிறிது நேரத்தில் 2 பேரும் விஷத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றனர். இதில் வாயில் நுரைதள்ளிய நிலையில் 2 பேரும் மயங்கி விழுந்து உயிருக்கு போராடினார்கள்.
அவர்களை அப்பகுதி மக்கள் மீட்டு சிகிச்சைக்காக மங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனாலும் சிகிச்சை பலன் அளிக்காமல் 2 பேரும் பரிதாபமாக இறந்து விட்டனர். இதுபற்றி கோணிபீடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.