‘கே.பி.சி.' நிகழ்ச்சியில் ரூ.1 கோடி வென்ற சத்துணவு ஊழியர் தேர்தல் பிரசார தூதராக நியமனம்

கே.பி.சி. நிகழ்ச்சியில் ரூ.1 கோடி வென்ற சத்துணவு ஊழியர் அமராவதி மாவட்ட தேர்தல் பிரசார தூதராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

Update: 2019-10-02 22:45 GMT
மும்பை,

மராட்டிய சட்டசபை தேர்தல் வருகிற 21-ந் தேதி நடைபெற உள்ளது. வேட்பாளர் தேர்வு மற்றும் பிரசாரம் செய்வது உள்ளிட்ட தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிர முனைப்புடன் இறங்கி உள்ளன. இந்த தேர்தலில், முதன்முறை வாக்காளர்கள், மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் மற்றும் பெண்கள் தங்களது வாக்குகளை செலுத்தும் வகையில் அவர்களை ஊக்கப்படுத்துவதற்காக பல்வேறு முயற்சிகளை தேர்தல் ஆணையம் எடுத்து வருகி றது. ஓட்டளிப்பதன் அவசியம் பற்றி வாக்காளர்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.

இதற்காக அமராவதி மாவட்டத்தில் பபிதா தடே என்ற சத்துணவு ஊழியர் தேர்தல் பிரசார தூதராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

பபிதா தடே அமராவதி மாவட்டம் அஞ்ஜன்காவ் சுர்ஜி என்ற கிராமத்தை சேர்ந்தவர். அங்குள்ள அரசு பள்ளிக்கூட சத்துணவு கூடத்தில் சமையல் செய்யும் ஊழியராக பணியாற்றி வருகிறார். கடந்த மாதம் தனியார் தொலைக்காட்சியில் நடத்தப்பட்ட ‘கோன் பனேகா குரோர்பதி' (கே.பி.சி.) என்ற வினாடி வினா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரூ.1 கோடி பரிசு வென்றதன் மூலம் பிரபலமானார்.

தேர்தல் பிரசார தூதராக நியமனம் செய்யப்பட்டது பற்றி பபிதா தடே கூறுகையில், ‘ஓட்டளிக்க ஒவ்வொருவரும் முன்வர வேண்டும். அது நம்முடைய தேசிய கடமை.

கிராமங்கள் உள்ளிட்ட பகுதிகளில் மக்களை இணைக்க நான் முயற்சி செய்வேன். தங்களது ஜனநாயக உரிமையை நிறைவேற்ற அவர்களை நான் வலியுறுத்துவேன்’ என்று கூறியுள்ளார்

மேலும் செய்திகள்