கிராமசபை கூட்டத்தில் அசுத்தமான குடிநீரை பாட்டிலில் கொண்டு வந்து மக்கள் வைத்தனர் சுத்தமான குடிநீர் வழங்க கோரிக்கை

பெருந்தோட்டத்தில் நடந்த கிராமசபை கூட்டத்தில் பொதுமக்கள், அசுத்தமான குடிநீரை பாட்டிலில் கொண்டு வந்து வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அவர்கள் கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் சுத்தமான குடிநீர் வழங்க கோரிக்கை விடுத்தனர்.

Update: 2019-10-02 22:45 GMT
திருவெண்காடு,

திருவெண்காடு அருகே பெருந்தோட்டம் ஊராட்சியில் நேற்று கிராமசபை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு ஊராட்சி செயலாளர் செல்வராஜ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் ஊராட்சியில் உள்ள பெரியார் தெரு, அம்பேத்கர் தெரு, அல்லிமேடு, நடுத்தெரு, விழக்கட்டளை ஆகிய பகுதிகளில் இருந்து திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

அப்போது பொதுமக்கள், தங்கள் பகுதிக்கு வினியோகிக்கப்படும் குடிநீர் அசுத்தமாக இருப்பதாகவும், அந்த குடிநீரை தொடர்ந்து குடித்தால் நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாகவும் கூறி அசுத்தமான குடிநீரை பாட்டிலில் அடைத்து கொண்டு வந்து கிராமசபை கூட்டத்தில் வைத்தனர். இதனால் அங்கு பரப்பரப்பு ஏற்பட்டது. மேலும் அவர்கள் தங்கள் பகுதிக்கு கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின்கீழ் சுத்தமான குடிநீரை வினியோகிக்க கேட்டு கொண்டனர்.

1,000 பேர் கையெழுத்திட்ட மனு

மேலும் பெருந்தோட்டம் கிராம தலைவர் பொன்.மாரியப்பன் மற்றும் பொதுமக்கள் 1,000 பேர் கையெழுத்திட்ட மனுவை அதிகாரியிடம் வழங்கினார். அதில், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு குறைந்த விலையில் விவசாயிகளிடம் இருந்து பெருந்தோட்டம் பகுதியில் தனியார் அனல் மின்நிலையம் அமைப்பதற்கு சுமார் 1,000 ஏக்கர் விளைநிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. அந்த 1,000 ஏக்கர் விளைநிலங்களும் தற்போது தரிசு நிலங்களாக உள்ளன. எனவே அந்த விளைநிலங்களை விவசாயம் செய்ய ஏதுவாக பெருந்தோட்டத்தில் வசிக்கும் ஏழை விவசாயிகளுக்கு திரும்ப வழங்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்ற கோரி அந்த மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

மேலும் செய்திகள்