காரமடை பகுதியில், குட்டை தூர்வாரும் பணியை கலெக்டர் ஆய்வு

காரமடை பகுதியில் குட்டை தூர்வாரும் பணியை கலெக்டர் ராஜாமணி ஆய்வு செய்தார்.

Update: 2019-10-02 22:15 GMT
காரமடை, 

காரமடை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வெள்ளியங்காடு ஊராட்சியில் புதுகுட்டை தூர்வாரும் பணி தொடங்கப்பட்டு உள்ளது. இந்த பணியினை மாவட்ட கலெக்டர் ராஜாமணி ஆய்வு செய்தார். அதன்பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் அனைத்து மாவட்டங்களிலுள்ள 5 ஆயிரம் சிறுபாசன குளங்கள் தலா ரூ.5 லட்சம் மதிப்பீட்டிலும், 25 ஆயிரம் குட்டைகள் மற்றும் ஊரணிகளை தலா ரூ.1 லட்சம் மதிப்பீட்டிலும் தூர்வார உத்தரவிட்டு உள்ளார். இதற்காக கூடுதல் சிறப்பு நிதியிலிருந்து ரூ.500 கோடி நிதி ஒதுக்கப்படும் என அறிவித்தார்.

மேலும் தமிழகத்தில் நீராதாரங்களை செம்மைபடுத்தி விவசாயிகள் பயனடையும் வகையில் 2019-20ம் ஆண்டிற்கு தமிழ்நாடு முழுவதும் 1,829 பணிகள் ரூ.499.68 கோடி மதிப்பீட்டில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் மேற்கொள்ள தமிழக அரசால் உத்தரவிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் கோவை மாவட்டத்தில் 45 பணிகள் ரூ.7.43 கோடியில் செயல்படுத்தப்பட உள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் கால்வாயில் வளர்ந்துள்ள செடிகொடிகள், முட்புதர்களை அகற்றுதல், கால்வாயினை தூர்வாரி சுத்தம் செய்தல், குளங்களின் கரைகளை பலப்படுத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ள இத்திட்டமானது அந்தந்த பகுதி விவசாயிகள் மூலமாகவும் செயல்படுத்தப்படுகின்றன. தற்போது புதுக்குட்டை இந்த திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சம் செலவில் தூர்வாரப்படுகிறது.

இதேபோன்று காரமடை ஊராட்சி ஒன்றியத்தில் 42 குட்டைகள் தலா ரூ.1 லட்சம் மதிப்பில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. குடிமராமத்து திட்டத்தின் மூலம் வாய்க்காலில் வரும் நீரை பயன்படுத்தி விவசாயிகள் தங்களது வருமானத்தை பெருக்கி கொள்வதுடன் தங்கள் பகுதிகளின் நிலத்தடி நீரை தேங்க செய்யும் வகையில் மழைநீர் சேமிப்பு திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின் போது பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் துவாரகநாத்சிங், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் பசுபதி, தாசில்தார் சாந்தாமணி, காரமடை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சைலஜா, சந்திரா உள்பட அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்