உளுந்தூர்பேட்டையில், ஸ்டூடியோ உரிமையாளர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது
உளுந்தூர்பேட்டையில் ஸ்டூடியோ உரிமையாளர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
உளுந்தூர்பேட்டை,
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள மூலசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் மணிகண்டன் (வயது 32). இவர் உளுந்தூர்பேட்டையில் ஸ்டூடியோ வைத்து நடத்தி வந்தார். இவரை கடந்த 2 நாட்களுக்கு முன்பு 6 பேர் கொண்ட கும்பல் கத்தி, கொடுவாள் போன்ற பயங்கர ஆயுதங்களால் வெட்டி கொலை செய்தது. இது குறித்து உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து மணிகண்டனை கொலை செய்தது தொடர்பாக மூலசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த பொக்லைன் எந்திர ஆபரேட்டர் தெய்வமணி, பரிந்தல் கிராமத்தை சேர்ந்த பிரேம்குமார் மற்றும் பெங்களூரை சேர்ந்த சுனில், சேத்தன், நவீன் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் மணிகண்டனை கொலை செய்ய தெய்வமணியின் தங்கையான ஆர்.ஆர்.குப்பத்தை சேர்ந்த சுதாகர் மனைவி ஜெயா (30) என்பவர் உதவி செய்தது தெரிந்தது. இதையடுத்து அவரை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் வெளியூர் தப்பிச்செல்வதற்காக உளுந்தூர்பேட்டை பஸ்நிலையத்தில் ஜெயா நின்று கொண்டிருந்தார். இது பற்றிய தகவல் அறிந்த உளுந்தூர்பேட்டை போலீசார் விரைந்து சென்று அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர். மேலும் கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள ரோகித் என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.