காதல் விவகாரத்தில் மாணவியுடன் ஓட்டம்: வாலிபர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய 3 பேர் கைது

காதல் விவகாரத்தில் மாணவியுடன் ஓட்டம் பிடித்த வாலிபரின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-10-02 22:15 GMT
தென்தாமரைகுளம்,

குமரி மாவட்டம் தென்தாமரைகுளத்தை அடுத்த தேரிவிளை பகுதியை சேர்ந்தவர் சுப்பையா. இவருடைய மனைவி ராஜலெட்சுமி (வயது 55). இவர்களுடைய மகன் ஹரிஹர சுதன்(23), பொக்லைன் எந்திர டிரைவராக உள்ளார். இவரும், தெற்கு குண்டல் பகுதியை சேர்ந்த மாணவி ஒருவரும் காதலித்து வந்தனர். இருவரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் மாணவியின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதலர்கள் ஊரை விட்டு ஓட்டம் பிடித்தனர். இதுதொடர்பாக மாணவியின் பெற்றோர் கன்னியாகுமரி போலீசில் புகார் செய்தனர். அதே சமயத்தில் மாணவியின் குடும்பத்தினர் வாலிபர் மீது ஆத்திரத்தில் இருந்தனர்.

பெட்ரோல் குண்டு வீச்சு

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மாணவியின் சகோதரர் சுதன் மற்றும் அவருடைய நண்பர்கள் 3 பேரும் சேர்ந்து ஹரி ஹரசுதன் வீட்டுக்கு சென்று அவருடைய குடும்பத்தினரை மிரட்டியதாக தெரிகிறது. இதனால், அச்சமடைந்த ஹரிஹரசுதனின் தாயார் ராஜலெட்சுமி கதவை அடைத்து உள்ளே சென்று விட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் திடீரென வீட்டின் மீது பெட்ரோல் குண்டை வீசி விட்டு தப்பிச் சென்றனர். இதில் பெட்ரோல் குண்டு வெடித்து கதவில் தீப்பற்றியது. அதிர்ச்சி அடைந்த ராஜலெட்சுமி கதவை திறந்து வெளியே வந்தார். அந்த சமயத்தில், அவரது சேலையில் தீப்பற்றியது. இதனால் அவர் அலறினார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதில் ராஜலெட்சுமி தீக்காயமின்றி தப்பினார்.

3 பேர் கைது

பின்னர் இதுகுறித்து தென்தாமரைகுளம் போலீசில் ராஜலெட்சுமி புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடிவந்தனர். இதனையடுத்து மாணவியின் சகோதரர் சுதன், தெற்கு குண்டலை சேர்ந்த வினோத், கன்னியாகுமரி சுனாமி காலனியை சேர்ந்த மற்றொரு சுதன் (23) ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும், இதில் தொடர்புடைய மாதவபுரத்தை சேர்ந்த மகேஷ் என்பவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்