சயான் ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் அலட்சியத்தால் மாநகராட்சி ஊழியர் சாவு - குடும்பத்தினர் குற்றச்சாட்டு

சயான் ஆஸ்பத்திரியில்டாக்டர்களின் அலட்சியத்தால் தாராவியை சேர்ந்த மாநகராட்சி ஊழியர் உயிரிழந்துவிட்டதாக குடும்பத்தினர் குற்றம் சாட்டி உள்ளனர்.

Update: 2019-10-01 22:45 GMT
மும்பை,

தாராவி விஜய் நகரை சேர்ந்தவர் ராஜாரத்தன் ஜெயராஜ் (வயது30). மாநகராட்சி ஊழியர். இவருக்கு நேற்று காலை 5 மணியளவில் நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக குடும்பத்தினர் அவரை சயான் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு ஆஸ்பத்திரி ஊழியர்கள் ராஜாரத்தன் ஜெயராஜிக்கு சாதாரண வாயு தொல்லை தான் என கூறி அவரை காக்க வைத்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் சுமார் ஒரு மணிநேரம் கழித்து அவர் தரையில் சுருண்டு விழுந்து உள்ளார். உடனடியாக ஓடி வந்த ஆஸ்பத்திரி ஊழியா்கள் அவரை தூக்கி சென்று சிகிச்சை அளித்தனர்.

இந்தநிலையில் சுமார் ஒரு மணிநேரம் கழித்து ராஜாரத்தன் ஜெயராஜ் மாரடைப்பால் உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் கூறினர். இதையறிந்த வாலிபரின் குடும்பத்தினர் ஆஸ்பத்திரியில் கூடினர். அவர்கள் டாக்டர்கள் அலட்சியத்தால் தான் வாலிபர் உயிரிழந்துவிட்டதாக குற்றம்சாட்டினர்.

மேலும் அவர்கள் வாலிபரின் சாவுக்கு காரணமான டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் உடலை வாங்க முடியாது என போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் வாலிபரின் குடும்பத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் சயான் ஆஸ்பத்திரியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்