6-வது மாடியில் இருந்து தூக்கி வீசி 2 வயது சிறுமியை கொலை செய்த பாட்டி கைது
6-வது மாடியில் இருந்து தூக்கி வீசி 2 வயது சிறுமியை கொலை செய்த பாட்டியை போலீசார் கைது செய்தனர்.
மும்பை,
மும்பை மலாடு கிழக்கு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனது பெற்றோருடன் வசித்து வந்தவள் சிறுமி ஜியா(வயது2). இவள் கடந்த சனிக்கிழமை காலை அந்த குடியிருப்பின் அருகில் பிணமாக மீட்கப்பட்டாள். முதலில் அவள் வீட்டின் ஜன்னல் வழியாக தவறி விழுந்திருக்கலாம் என போலீசார் நினைத்தனர்.
சம்பவம் குறித்து போலீசார் ஜியாவின் வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது சிறுமியின் வீட்டு ஜன்னல் கதவுகள் அனைத்தும் பூட்டப்பட்ட நிலையில் இருந்தது. மேலும் சிறுமி தூக்கிவீசப்பட்டு கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என பிரேத பரிசோதனை அறிக்கையிலும் சந்தேகம் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதையடுத்து போலீசார் சிறுமியின் குடும்பத்தினரிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது சிறுமியின் பாட்டி ருக்சானா (50) அவளை ஜன்னல் வழியாக தூக்கி வீசி கொலை செய்தது தெரியவந்தது.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:- ருக்சானாவுக்கு பேத்தி ஜியாவை ஆரம்பத்தில் இருந்தே பிடிக்கவில்லை. அவருக்கு மகள் வழி பேரன் மீது அதிக அன்பு இருந்ததாக தெரிகிறது. எனவே ஜியா மீது வெறுப்பாகவே இருந்து உள்ளார். சமீபத்தில் கூட சிறுமியால் மகனுடன் சண்டைபோட்டு மற்றொரு மகனின் வீட்டுக்கு சென்று உள்ளார்.
சம்பவத்தன்று சிறுமி ஜியா உடல்நிலை சரியில்லாமல் 4 மணி வரை தூங்காமல் இருந்து உள்ளார். இதில் ஜியா தூங்கிய பிறகு காலை 5 மணியளவில் ருக்சானா சிறுமியை தூக்கி ஜன்னல் வழியாக வீசி கொலை செய்து உள்ளார். பின்னர் ஜன்னல் கதவுகளை பூட்டிவிட்டு எதுவும் தெரியாது போல படுத்து கொண்டார்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து போலீசார் பேத்தியை ஜன்னல் வழியாக வீசி கொலை செய்த பாட்டியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.