ஆரணி மின்வாரிய அலுவலகத்தில் அரிசி ஆலை உரிமையாளர்கள், வியாபாரிகள் போராட்டம்

ஆரணி மின்வாரிய அலுவலகத்தில் அரிசி ஆலை உரிமையாளர்கள், நெல் அரிசி வியாபாரிகள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-10-01 23:00 GMT
ஆரணி, 

ஆரணியை அடுத்த களம்பூர் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட அரிசி ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கடந்த 2012, 2013 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளில் களம்பூர் மின்வாரிய அலுவலகத்தில் மின் ஊழியராக பணிபுரிந்த மணிகண்டன் என்பவர் அரிசி ஆலைகளின் மின் கட்டணத்தையும், அரிசி ஆலை உரிமையாளர்களின் வீடுகளின் மின் கட்டணத்தையும் பணமாக பெற்றுள்ளார். அதை மின்வாரிய அலுவலகத்தில் செலுத்தாமல் களம்பூர் பேரூராட்சி, கஸ்தம்பாடி, முக்குறும்பை, ஏந்துவாம்பாடி உள்ளிட்ட ஊராட்சிகளில் மின் கட்டணத்திற்கான தொகையை காசோலையாக பெற்று அதனை அரிசி ஆலை உரிமையாளர்களின் மின் கட்டணத்தில் வரவு வைத்துள்ளார்.

இது கடந்த 2018-ம் ஆண்டு கண்டறியப்பட்டு, மின்வாரிய ஊழியர் மணிகண்டன் ரூ.84 லட்சத்திற்கு மேல் முறைகேடு செய்தது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து அவர் சஸ்பெண்டு செய்யப்பட்டார். இதுதொடர்பாக அரிசி ஆலை அதிபர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு களம்பூர் அரிசி ஆலை உரிமையாளர்களுக்கும், நெல் அரிசி வியாபாரிகளுக்கும் நிலுவையில் உள்ள மின் கட்டணத்தை 15 நாட்களுக்குள் செலுத்தாவிட்டால் மின் இணைப்பு துண்டிப்பு செய்யப்படும் என அறிவிப்பு நோட்டீஸ் வந்துள்ளது.

இதுதொடர்பாக களம்பூர் அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்க கவுரவ தலைவர் கே.மணி, தலைவர் எஸ்.பி.தாமோதரன் ஆகியோர் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட அரிசி ஆலை உரிமையாளர்கள், நெல் அரிசி வியாபாரிகள் ஒன்று கூடி ஆரணி மின்வாரிய அலுவலகத்தில் மின்வாரிய செயற் பொறியாளர் சரஸ்வதியை சந்திக்க சென்றனர்.

அப்போது அவர், செங்கத்தில் நடைபெறும் விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்திற்கு சென்றுவிட்டதாகவும், மின்வாரிய அலுவலகத்தில் எந்த அலுவலரும் சரிவர பதில் அளிக்காததாலும், மனுவை பெற முன்வராததாலும், அரிசி ஆலை உரிமையாளர்கள், நெல் அரிசி வியாபாரிகள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் ஆரணி நகர போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள், எங்களால் மின்வாரியத்திற்கு மின் கட்டணமாக மாதந்தோறும் பல லட்சம் ரூபாய் செலுத்தி வருகிறோம். நாங்கள் முறையாக மின்வாரியத்திற்கு பணம் செலுத்திவிட்டோம். முறைகேடு செய்த மின்வாரிய ஊழியர் மீது நடவடிக்கை எடுக்காத நிலையில் எங்கள் மீதே மீண்டும் நடவடிக்கை எடுக்கப்படும், மின் இணைப்பு துண்டிப்பு செய்யப்படும் என அறிவிப்பு கொடுத்துள்ளார்கள். இதுசம்பந்தமாக மின் அலுவலர்கள் யாரும் பேச்சுவார்த்தைக்குகூட வராததால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றனர்.

இதுதொடர்பாக போலீசார் மின்வாரிய செயற் பொறியாளர் சரஸ்வதியிடம் போனில் பேசினர். அப்போது அவர், நாளை (வியாழக்கிழமை) அலுவலகத்திற்கு நேரில் வருமாறும், தற்போது களம்பூர் மின்வாரிய உதவி செயற் பொறியாளர் திருமலையிடம் புகார் மனுவை கொடுங்கள் என்று கூறினார்.

இதுபற்றி போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் கூறினர். இதனையடுத்து அங்கு வந்த மின்வாரிய உதவி செயற் பொறியாளர் திருமலையிடம் புகார் மனு வழங்கப்பட்டது. பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்