தாயை பயமுறுத்த விஷம் குடித்த வாலிபர் சாவு - கடலூர் அருகே பரிதாபம்
கடலூர் அருகே தாயை பயமுறுத்த விஷம் குடித்த வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கடலூர் முதுநகர்,
கடலூர் அருகே உள்ள சேடப்பாளையத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவருடைய மகன் லட்சுமி நாராயணன் (வயது 28). இவர் வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்ததாக தெரிகிறது. இதை சம்பவத்தன்று அவரது தாய் சரஸ்வதி தட்டிக்கேட்டு திட்டினார். இதனால் தன்னுடைய தாயை பயமுறுத்த நினைத்து, வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து லட்சுமி நாராயணன் குடித்து விட்டார். இதில் அவர் சிறிது நேரத்திலேயே வாயில் இருந்து நுரை தள்ளியபடி மயங்கி விழுந்தார்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி லட்சுமி நாராயணன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி ஆறுமுகம் கடலூர் முதுநகர் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தாயை பயமுறுத்துவதற்காக விஷம் குடித்த வாலிபர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.