சேலத்தில் உணவு பாதுகாப்பு துறை சார்பில் இனிப்பு-காரம் தயாரிப்பாளர், விற்பனையாளர் ஆலோசனை கூட்டம்

சேலத்தில் உணவு பாதுகாப்பு துறை சார்பில் இனிப்பு, காரம் தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

Update: 2019-10-01 21:30 GMT
சேலம், 

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மாவட்ட உணவு பாதுகாப்பு துறை சார்பில் இனிப்பு, காரம் தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் சேலம் புதிய பஸ்நிலையம் அருகே நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கதிரவன் தலைமை தாங்கி பேசியதாவது:-

உணவு பொருள் தயாரிப்பு அளவை பொறுத்து உணவு பாதுகாப்பு உரிமம் அல்லது பதிவு சான்றிதழ் பெற்றுக்கொள்ள வேண்டும். இனிப்பு, கார வகைகள் தயாரிக்கும் இடம், விற்பனை செய்யும் இடம் சுத்தமாக இருக்க வேண்டும். தயாரிப்பு பாத்திரங்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். பணியின் போது பணியாளர்கள் கையுறை, தலையுறை அணிந்திருக்க வேண்டும். பேக்கிங் செய்யப்படும் போது உணவு பொட்டலங்கள் பாக்கெட்டுகள் மீது உணவு பொருட்கள் விவரங்களை அச்சிட வேண்டும்.

உணவு பாதுகாப்பு உரிமம் அல்லது பதிவு சான்றிதழ் இல்லாமல் உணவு பொருட்கள் தயாரிப்பது சட்டப்படி குற்றமாகும். கை கழுவும் சோப்புகளை கொண்டு பாத்திரங்களை கழுவக் கூடாது. தயாரிப்பு பகுதியை இருட்டாக வைத்திருக்க கூடாது. பணியாளர்கள் வெற்றிலை, புகையிலை பயன்படுத்த அனுமதிக்க கூடாது.

குடிநீர் தொட்டிகள் திறந்த நிலையில் இருக்க கூடாது. உணவு பாதுகாப்பு துறை அலுவலர் ஆய்வுக்கு வரும்போது அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கும் வகையில் ஒரு பொறுப்பாளரை நியமிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார். இந்த கூட்டத்தில் இனிப்பு, காரம் தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்