பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கரூரில் அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கரூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-10-01 23:00 GMT
கரூர்,

கரூர் மாவட்ட தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று கரூர் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் சாமுவேல் சுந்தரபாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மோகன்குமார், நிர்வாகி கோபால்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில், கரூர் வட்டத்தலைவர் நாராயணன், மண்மங்கலம் வட்டத்தலைவர் நாகராஜன், கரூர் வட்ட செயலாளர் பாலகுமாரன் மண்மங்கலம் வட்ட செயலாளர் ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பென்ஷன் திட்டம்

ஓய்வு பெறுகிற நாளன்று அரசு ஊழியர்களை தற்காலிக பணிநீக்கம் செய்து மன உளைச்சலுக்கு உள்ளாக்கி அரசு விதிகளுக்கு புறம்பாக ஓய்வூதியம் பெறுவதை நிறுத்தம் செய்வதை அரசு கைவிட வேண்டும். புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். ஓய்வூதியரின் காப்பீடு திட்டத்தை அரசே நேரடியாக நடைமுறைப்படுத்திட வேண்டும். 21 மாத நிலுவைத்தொகை மற்றும் ஏ.பி.சி.டி. பிரிவு என அனைவருக்கும் ஒரு மாத ஓய்வூதியத்தை போனசாக வழங்க வேண்டும்.

காப்பீடு திட்ட குறைதீர்க்கும் கூட்டத்தையும், ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் காலமுறை கூட்டத்தையும் முறையாக அரசு ஆணைப்படி நடத்திட வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, கிராம ஊழியர்கள் உள்ளிட்ட குறைந்தபட்ச ஓய்வூதியம் பெறாத அனைவருக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்களை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. முடிவில் மாவட்ட பொருளாளர் மோகன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்