சென்னையை கலக்கிய பிரபல ரவுடி கோவையில் கைது - தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது சிக்கினார்
சென்னையை கலக்கிய பிரபல ரவுடி கோவையில் கைது செய்யப்பட்டார். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது போலீசார் சுற்றி வளைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கோவை,
சென்னை அரும்பாக்கம் ராணி அண்ணாநகரில் உள்ள வள்ளுவர் நெடும்பாறை பகுதியை சேர்ந்தவர் ராமானுஜம். இவருடைய மகன் ராதாகிருஷ்ணன் (வயது 30). பிரபல ரவுடியான இவர் மீது அரும்பாக்கம் உள்பட சென்னை மாநகரப் பகுதியில் உள்ள போலீஸ் நிலையங்களில் 8 கொலை வழக்கு, கொலை முயற்சி, கொலை மிரட்டல், திருட்டு, வழிப்பறி, ஆள்கடத்தல் என்று 36 வழக்குகள் உள்ளன.
சென்னையை கலக்கியதுடன், பிரபல ரவுடியாக வலம் வந்த இவரை போலீசார் பிடிக்க முடிவு செய்து அதற்கான நடவடிக்கையில் இறங்கினார்கள். இதை தெரிந்து கொண்ட ராதாகிருஷ்ணன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தலைமறைவானார். இதையடுத்து அவரை பிடிக்க சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படையைச் சேர்ந்த போலீசார் ராதாகிருஷ்ணனின் புகைப்படம் அடங்கிய நோட்டீசை அச்சிட்டு, தமிழ்நாடு முழுவதும் உள்ள போலீஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள் மற்றும் விமான நிலையங்களுக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் தலைமறைவான அவரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில் அவர் கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சென்னையில் உள்ள தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்கள் கோவை மாநகர போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீஸ் உயர் அதிகாரிகள் உத்தரவின்பேரில் சிங்காநல்லூர் இன்ஸ்பெக்டர் முனீஸ்வரன் தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் இரவு கோவை-திருச்சி ரோட்டில் உள்ள அந்த தனியார் மருத்துவமனைக்கு சென்றனர்.
பின்னர் போலீசார் அங்குள்ள டாக்டரிடம் ராதாகிருஷ்ணனின் புகைப்படத்தைக் காட்டி அவர் எந்த வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறித்து கேட்டறிந்தனர். அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் சம்பந்தப்பட்ட வார்டுக்கு சென்று அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர். இதனால் தனியார் மருத்துவமனையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து உடனடியாக சென்னையை சேர்ந்த தனிப்படைக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த அவர்கள் நேற்று அதிகாலையில் கோவை வந்து சேர்ந்தனர். அவர்களிடம் ராதாகிருஷ்ணனை கோவை போலீசார் ஒப்படைத்தனர். அவரை தனிப்படையினர் பலத்த பாதுகாப்புடன் ரெயில் மூலம் சென்னை அழைத்துச்சென்றனர்.
இதுகுறித்து கோவையை சேர்ந்த போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:-
சென்னையை 5 ஆண்டுகளாக கலக்கி வந்த ராதாகிருஷ்ணன் என்கவுண்ட்டர் பட்டியலில் இருந்துள்ளார். அதை அறிந்ததும் தன்னை போலீசார் சுட்டுக்கொன்று விடுவார்களோ என்று பயந்து தலைமறைவாகி திருப்பூரில் வசித்து வந்துள்ளார். அப்போதுதான் அவருக்கு காலில் உள்ள எலும்பு மூட்டில் வலி ஏற்பட்டு உள்ளது. இதற்காக சேலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
அப்போது அங்குள்ள டாக்டர்கள் அவரை கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு செல்லுமாறு பரிந்துரை செய்தனர். அதன்பேரில் கடந்த 3 நாட்களாக கோவையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அப்போதுதான் சென்னை போலீசாருக்கு தகவல் கிடைத்து உள்ளது. அதன்பேரில் அவர் தற்போது கைது செய்யப்பட்டு உள்ளார்.
அவர் திருப்பூரில் எவ்வளவு மாதங்களாக தங்கி இருந்தார் என்பது தெரியவில்லை. எனவே அவருக்கு திருப்பூரில் அடைக்கலம் கொடுத்தவர்கள் யார்? தற்போது அவர்கள் எங்கு உள்ளனர்? அவர்களுக்கும் ராதாகிருஷ்ணனுக்கும் என்ன தொடர்பு? அவர் மீது உள்ள வழக்குகளில் அவர்களுக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்து ரகசியமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.