பழுதடைந்த காமராஜர் சிலையை மாற்றக்கோரி உண்ணாவிரத போராட்டம் ஆழ்வார்திருநகரியில் இன்று நடக்கிறது
ஏரல் தாலுகா அலுவலகத்தில் நடந்த சமாதான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், ஆழ்வார்திருநகரியில் பழுதடைந்த காமராஜர் சிலையை மாற்றக்கோரி, இன்று (புதன்கிழமை) உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது.
ஏரல்,
ஆழ்வார்திருநகரி பஜாரில் கடந்த 1988-ம் ஆண்டு அகில இந்திய இளம் தமிழர் மன்றம் சார்பில், காங்கிரீட்டாலான காமராஜர் சிலை அமைக்கப்பட்டது. இதனை அப்போது எம்.பி.யாக இருந்த மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.
இந்த நிலையில் காமராஜர் சிலை பழுதடைந்த நிலையில் உள்ளதால், அதற்கு பதிலாக வெண்கல சிலை அமைக்க அகில இந்திய இளம் தமிழர் மன்றத்தினர் ஏற்பாடு செய்தனர். ஆனால் மாவட்ட நிர்வாகம் நீண்ட காலமாக அனுமதி வழங்காமல் காலம் தாழ்த்தி வருகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அகில இந்திய இளம் தமிழர் மன்றம் சார்பில், ஆழ்வார்திருநகரி காமராஜர் சிலை முன்பு இன்று (புதன்கிழமை) உண்ணாவிரத போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து ஏரல் தாலுகா அலுவலகத்தில் சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் நேற்று நடந்தது. தாசில்தார் அற்புதமணி தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் டேனியல்ராஜ், சுடலையாண்டி, இளம் தமிழர் மன்ற தலைவர் ராஜபாண்டி, சிலை சீரமைப்பு குழு பொறுப்பாளர் ஜெயக்குமார், முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சிவசுப்பிரமணியன், நகர தலைவர் பாக்கர் அலி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் தாசில்தார் அற்புதமணி கூறுகையில், இதுகுறித்து மாவட்ட கலெக்டருக்கு அறிக்கை அனுப்பி, உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்தார். அப்போது இளம் தமிழர் மன்றத்தினர் கூறுகையில், பழுதடைந்த காமராஜர் சிலையை மாற்றுவதற்கு மாவட்ட நிர்வாகத்திடம் விண்ணப்பித்து 1½ ஆண்டுகள் ஆகியும் நடவடிக்கை இல்லை. இதுகுறித்து பலமுறை கலெக்டரிடம் நேரில் முறையிட்டு மனு வழங்கியும், எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்றனர்.
இதையடுத்து சமாதான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், இன்று (புதன்கிழமை) ஆழ்வார்திருநகரியில் திட்டமிட்டபடி உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று இளம் தமிழர் மன்றத்தினர் தெரிவித்தனர்.