தஞ்சையில் 500 ரூபாய் கள்ளநோட்டுகளுடன் 4 பேர் கைது

தஞ்சையில் 500 ரூபாய் கள்ளநோட்டுகளுடன் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-10-01 22:15 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் சிலர் கள்ளநோட்டுகளை மாற்றுவதற்கு முயற்சி செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் கழனியப்பன் தலைமையில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். தஞ்சை அருகே பட்டுக்கோட்டை-மன்னார்குடி பிரிவு சாலை பகுதியில் சந்தேகப்படும்படி நின்ற ஒருவரை போலீசார் அழைத்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலை கண்ணன் நகரை சேர்ந்த கதிரவன்(வயது 50) என்பதும், அவர் கள்ள நோட்டுகள் வைத்து இருந்ததும் தெரிய வந்தது.

4 பேர் கைது

அவர் கொடுத்த தகவலின் பேரில் அதே பகுதியில் நின்று கொண்டிருந்த மன்னார்குடி கோரப்பாளையம் ரோட்டை சேர்ந்த செந்தமிழன்(52), மன்னார்குடி பாரதிதாசன் நகரை சேர்ந்த ஷாஜிகுமார்(55), மன்னார்குடி அருகே பரவாக்கோட்டை மேலதெருவை சேர்ந்த சவுந்தராஜன்(61) ஆகியோரை பிடித்து அவர்கள் புழக்கத்தில் விடுவதற்காக வைத்திருந்த 68 எண்ணிக்கையிலான 500 ரூபாய் கள்ளநோட்டுகளை கைப்பற்றினர்.

பின்னர் இவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்