சிகாரிப்புராவில், கிடப்பில் போடப்பட்டுள்ள நீர்ப்பாசன திட்டங்களை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவு - முதல்-மந்திரி எடியூரப்பா பேச்சு
சிகாரிப்புராவில், கிடப்பில் போடப்பட்டுள்ள நீர்ப்பாசன திட்டங்களை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக முதல்-மந்திரி எடியூரப்பா கூறினார்.
சிவமொக்கா,
சிவமொக்காவில் இருந்து சிகாரிப்புரா வழியாக ராணிபென்னூருக்கு ரெயில் பாதை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதற்காக ரூ.750 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் முதல்கட்டமாக ரெயில் பாதை அமைக்க தேவையான நிலங்களை கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக சிவமொக்கா மாவட்டம் சிகாரிப்புராவில் ரெயில்வே நிர்வாகம் சார்பில் அலுவலகம் ஒன்று அமைக்கப்பட்டது.
இந்த அலுவலகத்தின் திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவில் முதல்-மந்திரி எடியூரப்பா கலந்து கொண்டு அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பின்னர் அங்கு குத்துவிளக்கு ஏற்றி வைத்தார். அதைத்தொடர்ந்து நடந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார். அதன்பின்னர் அவர் பேசும்போது கூறியதாவது:-
சிவமொக்கா மாவட்டத்தில் குறிப்பாக சிகாரிப்புராவில் கிடப்பில் போடப்பட்டுள்ள நீர்ப்பாசன திட்டங்களை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். நீர்ப்பாசன திட்டங்களை விரைந்து முடிக்க முன்னுரிமை அளிக்கப்படும். அதற்கான அறிவிப்பு பட்ஜெட்டில் வெளியாகும். பொதுப்பணித்துறை திட்டங்களுக்கு கூடுதலாக நிதி ஒதுக்கப்படும்.
மாநிலத்தில் அனைத்து அணைகளும் நிரம்பி விட்டன. அதனால் அணைகளில் உள்ள தண்ணீரை விவசாயிகள் முழுமையாக விவசாயத்துக்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நாட்டில், விவசாய உற்பத்தியில் கர்நாடகம் சிறந்து விளங்க விவசாயிகள் பாடுபட வேண்டும். அது கர்நாடகத்தின் பெருமையை மட்டுமல்லாமல், விவசாயிகளின் பொருளாதாரத்தையும் உயர்த்தும். இவ்வாறு அவர் கூறினார்.
இதைத் தொடர்ந்து சிவமொக்கா டவுனில் புதிதாக சுதந்திர பூங்கா அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் முதல்-மந்திரி எடியூரப்பா பங்கேற்றார். அப்போது சுதந்திர பூங்கா அமைப்பதற்காக பூமி பூஜை செய்து, பணிகளை அவர் தொடங்கி வைத்தார்.