குமரி மாவட்டத்தில் 2 ஆயிரம் கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி தளவாய் சுந்தரம் தொடங்கி வைத்தார்

குமரி மாவட்டத்தில் 2 ஆயிரம் கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியை தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் தொடங்கி வைத்தார்.

Update: 2019-09-30 23:00 GMT
நாகர்கோவில்,

குமரி மாவட்ட சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம் ஆகியவற்றின் சார்பில் கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நாகர்கோவில் டதி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது.

கலெக்டர் பிரசாந்த் வடநேரே தலைமை தாங்கினார். தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அப்போது கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கி பேசும் போது கூறியதாவது:-

வாழ்த்து

இந்த திட்டத்தின் மூலம் ஏராளமான ஏழை கர்ப்பிணிகள் பயனடைந்து வருகின்றனர். இந்த திட்டத்தில் 5 வகையான சத்தான கலவை சாதம் வழங்கப்படுகிறது. கர்ப்பிணி பெண்களாகிய நீங்கள் இந்த வேளையில் சத்தான உணவுகளை குறிப்பிட்ட நேரத்தில் சாப்பிட வேண்டும். அப்போதுதான் ஆரோக்கியமான குழந்தைகளை பெற்று எடுக்க முடியும்.

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வழியில் செயல்படும் தமிழக அரசு இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. நீங்கள் அனைவரும் தமிழக அரசின் திட்டங்களை பெற்று ஆரோக்கியமான குழந்தைகளை பெற்றெடுக்க மனமார வாழ்த்துகிறேன்.

இவ்வாறு தளவாய் சுந்தரம் பேசினார்.

2 ஆயிரம் கர்ப்பிணிகள்

கலெக்டர் பிரசாந்த் வடநேரே பேசுகையில், குமரி மாவட்டத்தில் 10 குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலகங்கள் மூலமாக ஒரு தொகுதிக்கு 40 கர்ப்பிணிகள் வீதம் 50 தொகுதிகளில் 2 ஆயிரம் ஏழை கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா இன்று (அதாவது நேற்று) நடத்தப்பட்டுள்ளது. நாகர்கோவில் நகர்புறத்தை சார்ந்த 160 கர்ப்பிணி பெண்களுக்கும், ஊரக பகுதிகளில் 1,840 கர்ப்பிணிகளுக்கும் சமுதாய வளைகாப்பு விழா நடக்கிறது என்றார். குமரி மாவட்டத்தில் 2 ஆயிரம் ஏழை கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. நாகர்கோவில் டதி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நாகர்கோவில் வட்டாரத்தை சார்ந்த 160 கர்ப்பிணிகளுக்கு பூ, பழங்களுடன் வளையல் அணிவித்து வளைகாப்பு நடத்தப்பட்டது. மேலும் கர்ப்பிணி பெண்களுக்கு ஐந்து வகையான கலவை சாதமும்் வழங்கப்்பட்டது.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆவின் தலைவர் எஸ்.ஏ.அசோகன், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் கிருஷ்ணகுமார், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் நல ஆணைய உறுப்பினர் ராஜன், சுகாதார பணிகள் துணை இயக்குனர் மதுசூதனன், மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜோஸ்பின் சகாய பிரமிளா, மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் சரோஜினி, குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் காயத்ரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்