எனது கணவரின் ஆபாச படம் போலியானது: உதவி கலெக்டர் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் - ஆட்டோ டிரைவரின் மனைவி கோரிக்கை

எனது கணவரின் ஆபாச படம் போலியானது என்றம், உதவி கலெக்டர் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கைதான ஆட்டோ டிரைவரின் மனைவி கோரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2019-09-30 21:45 GMT
சேலம்,

சேலம் மாவட்டம் காகா பாளையம் அடுத்த செல்லியம்பாளையத்தை சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது 42). ஆட்டோ டிரைவரான இவர், அதே பகுதியை சேர்ந்த ஒருவரை ஓரின சேர்க்கைக்கு அழைத்ததாக மகுடஞ்சாவடி போலீசாரால் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும், ஒரு பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்யும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில், ஆட்டோ டிரைவர் மோகன்ராஜின் மனைவி பரிமளா நேற்று தனது குடும்பத்தினருடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். பின்னர் அவர், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இருந்த கலெக்டர் ராமனிடம் ஒரு கோரிக்கை மனுவை அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

எனது கணவர் மோகன்ராஜ் ஆட்டோ ஓட்டி எங்களை காப்பாற்றி வருகிறார். எங்களுக்கு ஒரு மகன் உள்ளார். ஆட்டோ ஓட்டும் இடத்தில் எனது கணவருக்கும், வேறு சில நபர்களுக்கும் இடையே பிரச்சினை இருந்தது. மேலும், எனது கணவரும், அவரது சகோதரரும் தொழிலாளர் விடுதலை முன்னணி சங்கத்தில் நிர்வாகிகளாக இருந்தனர். ஆனால் கடந்த ஜூலை மாதம் அவர்கள் இருவரும் சங்கத்தில் இருந்து திடீரென நீக்கப்பட்டதாக தகவல் வந்தது. இதனை சாதகமாக பயன்படுத்தி கொண்ட எதிர்தரப்பினர் எனது கணவரை பழிவாங்கும் நோக்கில், ஓரின சேர்க்கைக்கு அழைத்ததாக போலீசில் புகார் செய்துள்ளனர்.

அவர் மீது பொய் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், ஒரு பெண்ணை பலாத்காரம் செய்ததாக வீடியோ மார்பிங் செய்யப்பட்டு அதை சமூக வலைதளங்களில் சிலர் பதிவிட்டுள்ளனர். அந்த ஆபாச வீடியோ போலியானது. எனவே, அந்த வீடியோவை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். இதுதவிர, எனது கணவர் மீது பொய் புகார் கூறி போலீசார் கைது செய்துள்ளதால் இந்த வழக்கை சேலம் உதவி கலெக்டர் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்