ஆக்கிரமிப்பை அகற்ற காரணமாக இருந்ததாக தேவகோட்டை அருகே தலையாரி வெட்டி படுகொலை

தேவகோட்டை அருகே ஆக்கிரமிப்பு இடத்தை அகற்றுவதற்கு காரணமாக இருந்ததாக கூறி தலையாரி வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

Update: 2019-09-30 23:45 GMT
தேவகோட்டை,

மதுரை ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் அனைத்து மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள் மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்பு இடங்களை அகற்ற உத்தரவிட்டதையடுத்து சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் தேவகோட்டை தாலுகாவிற்குட்பட்ட திருவேகம்பத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன்(வயது 50). இவர் தலையாரியாக இருந்தார்.

திருவேகம்பத்தூரை அடுத்த வெள்ளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன்(50). இவர் திருவேகம்பத்தூர் கண்மாயில் சுமார் 3 ஏக்கர் நீர்நிலைகள் அடங்கிய இடத்தை ஆக்கிரமிப்பு செய்து விவசாயம் செய்து வந்தாராம்.

இதுகுறித்து அருகே உள்ள அங்களான்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தமிழக முதல்-அமைச்சரின் தனிப்பிரிவுக்கு புகார் மனு அனுப்பி இருந்தனர்.

இதையடுத்து நேற்று காலை தேவகோட்டை தாசில்தார் மேசியோதாஸ் உத்தரவின் பேரில் சருகணி பிர்கா வருவாய் ஆய்வாளர் கிருஷ்ணன், கிராம நிர்வாக அதிகாரி சந்திரா மற்றும் வருவாய்த்துறையினர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கணேசன் ஆக்கிரமிப்பு செய்த இடங்களை அகற்றி விட்டு சென்றனர்.

இதையடுத்து நேற்று மாலை கணேசன், தலையாரி ராதாகிருஷ்ணனை செல்போனில் தொடர்பு கொண்டு இந்த ஆக்கிரமிப்பை அகற்ற நீ தான் காரணம் என்று கூறி திட்டியதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் ராதாகிருஷ்ணன் தனது மோட்டார் சைக்கிளில் தொண்டி-மதுரை சாலையில் சென்றார். அப்போது அவரை கணேசன் வழிமறித்து, தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் வெட்டி கொலை செய்தார்.

அதில் படுகாயமடைந்த தலையாரி ராதாகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

மேலும் இந்த கொலை சம்பவம் நடந்த இடத்தை தாசில்தார் மேசியோதாஸ் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டனர். படுகொலை செய்யப்பட்ட ராதாகிருஷ்ணனுக்கு ராஜேஸ்வரி என்ற மனைவியும், பரணி, தாரணி என்ற இரு மகள்கள் உள்ளனர். இதுகுறித்து திருவேகம்பத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கணேசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்