கள்ளக்குறிச்சி மாவட்டத்துடன் இணைக்க எதிர்ப்பு: மடப்பட்டு பகுதியில் கடையடைப்பு

திருவெண்ணெய்நல்லூர் பகுதிகளை கள்ளக்குறிச்சி மாவட்டத்துடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து மடப்பட்டில் நேற்று வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு கார், வேன் மற்றும் ஆட்டோக்கள் ஓடவில்லை.

Update: 2019-09-30 22:30 GMT
அரசூர், 

விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்குவதற்கான பணிகள் நடந்து வருகிறது. இதில் விழுப்புரத்தில் இருந்து மிக அருகில் உள்ள திருவெண்ணெய்நல்லூர், திருநாவலூர், முகையூர் ஆகிய குறு வட்டங்களுக்குட்பட்ட பகுதிகளை கள்ளக்குறிச்சி மாவட்டத்துடன் இணைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக தெரிகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மேற்கண்ட பகுதிகள் விழுப்புரம் மாவட்டத்திலேயே தொடர்ந்து இருக்குமாறு நடவடிக்கை எடுக்கவும், விழுப்புரத்தில் இருந்து 30 கி.மீ. தூரத்திற்கு உட்பட்ட மேற்கண்ட பகுதிகளை ஒன்றிணைத்து திருவெண்ணெய்நல்லூரை தனி தாலுகாவாக அறிவித்து விழுப்புரம் மாவட்டத்துடன் இணைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் கடந்த சில வாரங்களாக தொடர் போராட்டங்கள் நடந்து வருகிறது.

இந்த நிலையில் இதே கோரிக்கையை வலியுறுத்தி திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள மடப்பட்டு பகுதிகளில் வியாபாரிகள் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக பொதுமக்கள், விவசாயிகள், பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் என அனைத்து தரப்பினருக்கும் வியாபாரிகள், துண்டு பிரசுரங்களை வினியோகம் செய்தனர்.

இதனை தொடர்ந்து நேற்று மடப்பட்டு பகுதியில் கடையடைப்பு போராட்டம் நடந்தது. இதனால் ஓட்டல்கள், மளிகை கடைகள், காய்கறி கடைகள், துணிக்கடை, நகை கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. இதன் காரணமாக மடப்பட்டின் முக்கிய வீதிகள் அனைத்தும் ஆள்நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டன.

இந்த கடையடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மடப்பட்டு பகுதி வாகன ஓட்டுனர் மற்றும் உரிமையாளர் சங்கத்தினர் தங்களது வாகனங்களை இயக்கவில்லை. இதனால் ஆட்டோக்கள், வேன்கள், கார்கள் மற்றும் சரக்கு வாகனங்கள் ஓடவில்லை. இந்த போராட்டத்தின் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையில் சற்று பாதிப்பு ஏற்பட்டது.

மேலும் மடப்பட்டு கடை வீதியில் பொதுமக்கள், வியாபாரிகள், முஸ்லிம் ஜமாத்கள், வாகன டிரைவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து கருப்புக்கொடி ஏந்தியபடி கண்டன ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்