போலி பாஸ்போர்ட் வழக்கில் திருப்பூர் தி.மு.க. பிரமுகர் கைது
போலி பாஸ்போர்ட் வழக்கில் திருப்பூரை சேர்ந்த தி.மு.க. பிரமுகரும், அவருடைய பெண் உதவியாளரும் கைது செய்யப்பட்டனர்.
திருப்பூர்,
திருப்பூர் ஓடக்காடு பகுதியை சேர்ந்த ராஜ்மோகன்குமார் என்பவர், பிரேம்குமாரிடம் ரூ.28 லட்சம் பெற்றுக்கொண்டு போலி பாஸ்போர்ட் பெற உதவி செய்தது தெரியவந்தது. இதையடுத்து பிரேம்குமாரை போலீசார் கைது செய்தனர்.
போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில் தி.மு.க. பிரமுகரான ராஜ்மோகன்குமார், திருப்பூரில் அலுவலகம் அமைத்து வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்பவர்களுக்கு பாஸ்போர்ட் எடுத்து அனுப்பி வைக்கும் தொழில் செய்து வந்தது தெரியவந்தது. இவர் தி.மு.க. திருப்பூர் வடக்கு மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளராக உள்ளார்.
வெளிநாட்டு நிறுவனங்களின் பனியன் ஆர்டர்களை பெறும் வகையில் பையிங் அலுவலகம் மற்றும் பெட்ரோல் விற்பனை நிலையம் ஆகியவற்றையும் இவர் நடத்தி வருவதாக தெரிகிறது. இந்தநிலையில் தொழில் நிமித்தமாக வெளிநாடு செல்ல இருந்த ராஜ்மோகன்குமாரை கியூ பிரிவு போலீசார் கைது செய்தனர்.
அவர் அளித்த தகவலின் பேரில் திருப்பூர் ராக்கியாபாளையத்தில் உள்ள அவருடைய அலுவலகம் மற்றும் வீடுகளில் கியூ பிரிவு போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அங்கிருந்து சில ஆவணங்களை கியூ பிரிவு போலீசார் கைப்பற்றியதாக கூறப்படுகிறது. இதற்கு உடந்தையாக இருந்ததாக ராஜ்மோகன்குமாரின் பெண் உதவியாளரான திருப்பூர் ராக்கியாபாளையத்தை சேர்ந்த பாரதி என்பவரையும் போலீசார் கைது செய்தனர். இதுபோல் போலி பாஸ்போர்ட் மூலமாக மேலும் 7 பேர் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஏற்கனவே திருப்பூரை சேர்ந்த ஒருவர் போலி பாஸ்போர்ட்டில் வெளிநாடு செல்ல முயன்றபோது கடந்த சில மாதங்களுக்கு முன்பு கியூ பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
அவர் மூலமாக கிடைத்த தகவலின் பேரில், போலி பாஸ்போர்ட் தயாரிப்பு கும்பலை கூண்டோடு கைது செய்ய கியூ பிரிவு போலீசார் திட்டமிட்டு் ரகசியமாக கண்காணித்து வந்தனர். அதன் தொடர்ச்சியாக இந்த கைது சம்பவங்கள் நடந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
ராஜ்மோகன்குமாருடன் தொடர்பில் இருப்பவர்களின் விவரங்களையும் சேகரித்து கியூ பிரிவு போலீசார் ரகசிய கண்காணிப்பை தொடர்ந்துள்ளனர். இந்த விவகாரத்தில் முக்கிய பிரமுகர்கள் உள்பட மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக மேலும் 3 பேரை கைது செய்வதற்காக கியூ பிரிவு போலீசார் திருப்பூரில் முகாமிட்டு ரகசியமாக தேடி வருகிறார்கள்.