ஈரோடு முள்ளாம்பரப்பில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுக்குழு கூட்டம்

ஈரோடு முள்ளாம்பரப்பில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

Update: 2019-09-30 22:30 GMT
மொடக்குறிச்சி,

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம் ஈரோடு முள்ளாம்பரப்பில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு பேரவைத் தலைவர் திருச்சி தேவராஜ் தலைமை தாங்கினார். மாநில இளைஞர் அணி செயலாளர் சூரியமூர்த்தி, நாமக்கல் எம்.பி.சின்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அதைத்தொடர்ந்து கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன், மாநில தலைமை நிலைய செயலாளர் சுரேஷ்பொன்னுவேல், பொருளாளர் பாலு ஆகியோர் பேசினார்கள்.

அதைத்தொடர்ந்து கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக ஈரோடு கிழக்கு மாவட்ட செயலாளர் பிரபாகர் வரவேற்று பேசினார். முடிவில் மாவட்ட பொருளாளர் வேலுச்சாமி நன்றி கூறினார்.

முன்னதாக கொ.ம.தே.க. பொதுச்செயலாளர் ஈஸ்வரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக முதல்வர் கேரளா சென்று பாண்டியாறு-புன்னம்பழா திட்டம் குறித்து பேசியது மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்காக குழு அமைத்ததோடு நின்றுவிடாமல் இத்திட்டத்தை விரைந்து தொடங்க வேண்டும். இதனால் நீலகிரியில் பெய்யும் மழை தமிழகத்திற்கு கிடைக்கும். உயர்மின் அழுத்த திட்டத்தால் விவசாயிகளின் வாழ்வு கேள்வி குறியாகி உள்ளது. தமிழக அரசு விவசாயிகளுடன் பேசி விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும். பொள்ளாச்சி, கோபி, ஆத்தூர் என புதிய மாவட்டங்களை உருவாக்க வேண்டும்.

உள்ளாட்சித் தேர்தல் நவம்பர் மாதம் நடத்தப்பட வேண்டும். கொங்கு மண்டலத்தில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி வலுவாக இருப்பதால் கூட்டணியில் அதிக இடங்களை கேட்டு பெறுவோம். இந்தியை திணிக்கக்கூடாது என்பது தான் அனைவரின் நிலைப்பாடு. விக்கிரவாண்டியில் தி.மு.க. வேட்பாளரையும், நாங்குநேரியில் காங்கிரஸ் வேட்பாளரையும் ஆதரிக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்