கோவை குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய தலைமறைவு குற்றவாளிகள் குறித்து தகவல் தெரிவித்தால் ரூ.8 லட்சம் பரிசு
கோவை குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்புடைய தலைமறைவு குற்றவாளிகள் குறித்து தகவல் தெரிவித்தால் ரூ.8 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் அறிவித்து உள்ளனர்.
கோவை,
கோவையில் கடந்த 1998-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ந் தேதி பல இடங்களில் வெடிகுண்டுகள் வெடித்தன. இதில் 50-க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள். 100-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவையை சேர்ந்த பாஷா, அன்சாரி உள்பட 130-க்கும் மேற்பட்டவர்களை கைது செய்தனர்.
இதில் முக்கிய குற்றவாளிகளான பாஷா, அன்சாரி உள்பட பலருக்கு ஆயுள் தண்டனையும், மற்றவர்களுக்கு தலா 10 ஆண்டு, 7 ஆண்டு என்று சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதில் சிலர் மேல் முறையீடு செய்ததால் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். பாஷா, அன்சாரி உள்பட 14 பேர் தற்போது கோவை மத்திய சிறையில் உள்ளனர்.
இந்த நிலையில் கோவை குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய கோவை உக்கடத்தை சேர்ந்த சாதிக் என்கிற ராஜா என்கிற டெய்லர் ராஜா என்கிற வளர்ந்த ராஜா (வயது 43), முஜிபுர் ரகுமான் என்கிற முஜி (50), ஆகியோர் தலைமறைவாக உள்ளனர்.
அதுபோன்று திருச்சி, மதுரையில் நடந்த குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய அபுபக்கர் சித்திக் (55), அயூப் என்கிற அஸ்ரப் அலி ஆகியோரும் தலைமறைவாக உள்ளனர். அவர்கள் குறித்து தகவல் தெரிவித்தால் பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் தேடப்பட்டு வரும் 4 பேரின் புகைப்படத்துடன் நோட்டீசு அச்சடித்து பொதுமக்களிடம் வினியோகம் செய்து வருகிறார்கள்.
இது குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் கூறியதாவது:-
கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தில் சாதிக், முஜி ஆகியோருக்கு நேரடி தொடர்பு உள்ளது. மற்ற 2 பேரும் மதுரை மற்றும் திருச்சியில் நடந்த குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடையவர்கள். அவர்களை பிடித்தால்தான் கோவையில் நடந்த சம்பவத்துக்கும் அவர்களுக்கும் தொடர்பு இருக்கிறதா என்பது தெரியவரும்.
பல வருடங்களாக தலைமறைவாக இருக்கும் அவர்களின் புகைப்படம் தற்போது கிடைத்து உள்ளது. எனவே அவர்கள் குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசிடம் தகவல் தெரிவிக்கலாம். 4 பேர் குறித்து தகவல் தெரிவித்தால் தலா ரூ.2 லட்சம் என்று மொத்தம் ரூ.8 லட்சம் பரிசாக வழங்கப்படும்.
தகவல் கொடுப்பவர்களின் பெயர் ரகசியமாக வைக்கப்படும். எனவே போலீசாரால் தேடப்பட்டு வரும் குற்றவாளிகள் 4 பேர் குறித்து பொதுமக்கள் தாராளமாக தகவல் தெரிவித்து உதவ முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.