காமராஜ் சாகர் அணையில், பிளாஸ்டிக் கழிவுகளால் மாசுபடும் தண்ணீர்
ஊட்டி அருகே காமராஜ் சாகர் அணையில் பிளாஸ்டிக் கழிவுகளால் தண்ணீர் மாசுபடுகிறது.
ஊட்டி,
தமிழகத்தில் முதல்-அமைச்சராக காமராஜர் இருந்தபோது, நீலகிரி மாவட்டத்தில் சில அணைகள் கட்டப்பட்டன. அந்த அணைகளில் சேகரித்து வைக்கப்படும் தண்ணீரில் இருந்து மின் உற்பத்தி செய்யப்பட்டு தமிழகம் முழுவதும் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஊட்டி-கூடலூர் சாலை அருகே காமராஜ் சாகர் அணை உள்ளது. இந்த அணை 49 அடி கொள்ளளவு கொண்டது. நடப்பாண்டில் பெய்த தொடர் மழையால் அணையின் நீர்மட்டம் வெகுவாக அதிகரித்து உள்ளது. இதனால் அணை கடல்போல் அழகாக காட்சி அளிக்கிறது.
அணையில் இருந்து 2 மதகுகள் வழியாக தண்ணீர் திறந்து விடப்பட்டு, முதுமலை வனப்பகுதியில் வாழும் வனவிலங்குகளின் தாகம் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஒரு காலத்தில் அணையின் எழில் மிகுந்த காட்சியை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து வந்தனர். தற்போது அணை கரையோரத்தில் எங்கு பார்த்தாலும் பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்து கிடப்பதை காண முடிகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு சுற்றுச்சூழல் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊட்டி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கனமழை பெய்தது. அதனால் தலைகுந்தா அருகே வனப்பகுதியில் இருந்து தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி காமராஜர் சாகர் அணையில் கலந்தது. அப்பகுதி பொதுமக்கள் பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகளை ஆங்காங்கே கொட்டுகின்றனர். இதனால் தண்ணீர் அதிகமாக செல்லும்போது, அவை அடித்து செல்லப்பட்டு அணையில் படிகிறது. மேலும் பைன்பாரஸ்ட் சுற்றுலா தலத்தின் கீழ்பகுதியில் அணை கரையோரத்தில் காலி மதுபாட்டில்கள், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்கள், பிளாஸ்டிக் பைகள் மற்றும் குப்பைகள் பரவி கிடக்கின்றன. அதனால் அணை தண்ணீர் மாசடைந்து உள்ளது. இதுகுறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறியதாவது:-
காமராஜர் சாகர் அணையையொட்டி உள்ள வனப்பகுதிகளில் காட்டெருமை, கடமான், சிறுத்தைப்புலி, காட்டுப்பன்றி போன்ற வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்த வனவிலங்குகள் அணை தண்ணீரை பருகும்போது, பிளாஸ்டிக் கழிவுகளை தின்றால் உடல் நலம் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும் அவை உடலுக்குள் சென்று மக்காமல் இருப்பதால் வனவிலங்குகள் உயிரிழக்கும் அபாயம் நிலவுகிறது. பசுமையான நீலகிரியில் பிளாஸ்டிக் ஒழிப்புக்கு முக்கியத்துவம் அளித்து வரும் அதே நேரத்தில், காமராஜர் சாகர் அணையை மாசுபடுத்தும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி தூய்மை செய்ய வேண்டும். மேலும் அணையில் பிளாஸ்டிக் கழிவுகள் கலக்காமல் இருக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.