இரணியல் அருகே அனுமதியின்றி பட்டாசு தயாரித்தவர் கைது

இரணியல் அருகே வீட்டில் அனுமதியின்றி பட்டாசு தயாரித்தவரை போலீசார் கைது செய்தனர். மேலும், வீட்டில் பதுக்கி வைத்திருந்த 9 கிலோ பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2019-09-29 22:15 GMT
இரணியல்,

இரணியல் சுற்றுவட்டார பகுதிகளில் அனுமதியின்றி பட்டாசு தயாரிப்பதாக இரணியல் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் முத்துராஜ் தலைமையிலான போலீசார் இரணியல், மைலோடு பகுதிகளில் ரோந்து சென்றனர். அவர்கள், மைலோடு பகுதியில் சென்ற போது ராஜ்குமார் (வயது 44) என்பவர் அனுமதியின்றி வீட்டில் பட்டாசு தயாரித்தது தெரிய வந்தது. அவரது வீட்டை சோதனை செய்த போது, சிறு சிறு மூடைகளில் பட்டாசு, வெடிமருந்து மற்றும் பன ஓலை போன்றவை இருந்தன.

பறிமுதல்

இதனையடுத்து அங்கு பதுக்கி வைத்திருந்த 9 கிலோ எடையுள்ள பட்டாசு மற்றும் வெடிமருந்து போன்றவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், பட்டாசு தயாரித்த ராஜ்குமார் மீது வெடிமருந்து தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இதுதொடர்பாக இரணியல் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்