வீடு வீடாக குப்பை சேகரிக்கும் பணியாளர்களிடம் பிளாஸ்டிக் பொருட்களை வழங்கினால் பொதுமக்களுக்கு அபராதம்
வீடு வீடாக குப்பை சேகரிக்கும் துப்புரவு பணியாளர்களிடம், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை வழங்கினால் பொதுமக்களுக்கு அபராதம் விதிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேலூர்,
பிளாஸ்டிக் பொருட்களால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுவதோடு, சுகாதார சீர்கேடும் ஏற்பட்டு வந்தது. இதை தடுக்கும் வகையில் தமிழ்நாட்டில் கடந்த ஜனவரி மாதம் 1-ந் தேதியில் இருந்து ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யவும், பயன்படுத்தவும் தடைவிதிக்கப்பட்டது.
இதனால் அதிகாரிகள் கடைகளில் அவ்வப்போது திடீர் சோதனை நடத்தி தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்தால் அதை பறிமுதல் செய்வதுடன், கடை உரிமையாளருக்கு அபராதமும் விதித்து வருகிறார்கள்.
வேலூர் மாநகராட்சியில் உள்ள 4 மண்டலங்களிலும் 42 இடங்களில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் வீடு வீடாக சென்று மக்கும் குப்பை, மக்காத குப்பை என தனித்தனியாக பிரித்து சேகரித்து வருகிறார்கள்.
பொதுமக்களும் தங்கள் வீடுகளிலேயே மக்கும் பொருட்களை ஒன்றாகவும், மக்காத பிளாஸ்டிக் மற்றும் இதர பொருட்களை தனியாகவும் வைத்து துப்புரவு பணியாளர்களிடம் வழங்கி வருகிறார்கள். தினமும் வீடு வீடாக சென்று துப்புரவு பணியாளர்கள் குப்பைகளை சேகரித்து வருவதால் வேலூர் மாநகராட்சி குப்பை தொட்டியில்லாத நகரமாக மாற்றப்பட்டுள்ளது.
இதனால் மாநகராட்சி பகுதிகளில் எங்கும் குப்பை தொட்டி வைக்கப்படவில்லை. வீடு தேடிவரும் மாநகராட்சி துப்புரவு பணியாளர்களிடம் மட்டுமே குப்பைகளை வழங்க வேண்டும். தெருக்களில் குப்பைகளை கொட்டக்கூடாது. துப்புரவு பணியாளர்கள் மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து சேகரித்து வரும் குப்பைகளில் மக்கும் குப்பைகளில் இருந்து இயற்கை உரம் தயாரிக்கப்பட்டு வருகிறது. மக்காத குப்பையான பிளாஸ்டிக் பொருட்கள் சிமெண்டு தொழிற்சாலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதுவரை பொதுமக்கள் தங்கள் வீடுகளில் பயன்படுத்திய பிளாஸ்டிக் பொருட்கள் மாநகராட்சி துப்புரவு பணியாளர்களிடம் கொடுத்து வந்ததை அவர்கள் பெற்றுச் சென்றனர். இந்த நிலையில் மக்காத குப்பைகளான பிளாஸ்டிக் பொருட்களை வாங்கக்கூடாது என அதிகாரிகள் கூறியிருப்பதாக துப்புரவு பணியாளர்கள் தெரிவித்தனர். பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து சென்றால் அதிகாரிகள் தங்களுக்கு அபராதம் விதிப்பதாக கூறுவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-
ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வேலூர் மாநகராட்சியில் பிளாஸ்டிக் பயன்பாடு குறைந்து விட்ட நிலையில் இன்னும் ஒரு சிலர் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தி வருகிறார்கள். அவர்களிடம் மக்காத குப்பையாக அதை தனியாக சேகரித்து வரப்படுகிறது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை இனி வீடுகளில் இருந்து வாங்கக்கூடாது.
42 இடங்களில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்தாலும் குப்பைகளை கொட்ட இடமில்லை. எனவே பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் தடுக்க கமிஷனர் சிவசுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார். இதனால் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கறிக்கடை, கோழிக்கடைகளிலும் சோதனை நடத்தப்பட உள்ளது.
அதேபோன்று பொதுமக்கள் துப்புரவு பணியாளர்களிடம் பிளாஸ்டிக் பொருட்களை கொடுக்கக்கூடாது. துப்புரவு பணியாளர்கள் பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து வந்தால் அது எந்தப்பகுதியில் இருந்து வந்துள்ளது என்பது குறித்து ஆய்வு செய்யப்படும். மேலும் துப்புரவு பணியாளர்கள் வீடு வீடாக சென்று குப்பைகள் சேகரிக்கும் போது அந்தப்பகுதியில் அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்வார்கள்.
அப்போது பொதுமக்கள் பிளாஸ்டிக் பொருட்களை கொடுத்தால் அவர்களுக்கும் அபராதம் விதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
மேற்கண்டவாறு அவர்கள் கூறினர்.