தொடர் மழையால் கூடலூரில் பச்சை தேயிலை மகசூல் கடும் பாதிப்பு - விவசாயிகள் கவலை

தொடர் மழையால் கூடலூரில் பச்சை தேயிலை மகசூல் கடுமையாக பாதித்து உள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

Update: 2019-09-28 22:15 GMT
கூடலூர்,

நீலகிரி மாவட்ட மக்களின் வாழ்வாதாரமாக பச்சை தேயிலை விவசாயம் இருந்து வருகிறது. பச்சை தேயிலை விவசாயத்தை நம்பி சுமார் 3 லட்சம் பேர் பிழைப்பு நடத்தி வருகின்றனர். கூடலூர் பகுதியில் மட்டும் விவசாயிகள், தோட்ட தொழிலாளர்கள் என 1 லட்சம் பேர் உள்ளனர். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை பச்சை தேயிலைக்கு நியாயமான விலை கிடைத்தது. இதனால் விவசாயிகளின் பொருளாதார நிலை உயர்ந்து இருந்தது.

ஆனால் உலக வர்த்தக மயமாக்கல், வெளிநாடுகளில் இருந்து தேயிலைத்தூள் இறக்குமதி உள்பட பல்வேறு காரணங்களால் நீலகிரியின் பச்சை தேயிலைக்கு போதியவிலை கிடைக்காமல் போனது. இதனால் பச்சை தேயிலை விவசாயம் பாதிக்கப்பட்டது. பல ஆண்டுகளாக போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் தங்களது தோட்டங்களை பராமரிக்க முடியாமல் திணறி வருகின்றனர். மேலும் தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டியது, உர விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் விவசாயிகள் கடும் நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். தற்போது சராசரியாக பச்சை தேயிலை கிலோ ரூ.11 என விலை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதனால் பொருளாதார ரீதியாக விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கூடலூர் பகுதியில் கடந்த 3 மாதங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சில நேரங்களில் மழை ஓய்ந்தாலும், வெயில் அடிப்பது இல்லை. அதற்கு மாறாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. இதனால் போதிய வெயில் இன்றி பச்சை தேயிலை மகசூல் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. மேலும் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். இது தவிர கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் உள்ள தொழிற்சாலைகளில் தேயிலைத்தூள் உற்பத்தி குறைந்து விட்டது. எனவே கூடலூர் பகுதி தேயிலை விவசாயிகளுக்கு நிவாரண தொகை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து அகில இந்திய தேயிலை விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் சளிவயல் சாஜி கூறியதாவது:-

நாளுக்குநாள் பச்சை தேயிலை விளைவிக்கும் விவசாயிகள் ஏதாவது ஒரு வகையில் பாதிக்கப்பட்டு கொண்டே இருக்கிறார்கள். கூடலூர் பகுதியில் பெய்து வரும் மழையால் தேயிலை தோட்டங்களில் அளவுக்கு, அதிகமாக ஈரத்தன்மை உள்ளது. ஆனால் அதற்கு ஏற்ப வெயிலின் தாக்கம் இல்லை. இதனால் தேயிலை செடிகளில் மகசூல் இல்லை. எனவே கடந்த சில மாதங்களாக விவசாயிகள் வருமானம் இன்றி பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் மகசூல் இல்லாததால் தொழிற்சாலைகளிலும் தேயிலைத்தூள் உற்பத்தி குறைந்து உள்ளது. இதனால் பச்சை தேயிலைக்கு விலையும் கிடைக்கவில்லை. மேலும் தோட்ட தொழிலாளர்கள் வேலை இழந்து உள்ளனர். மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்தியதன்பேரில் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து உள்ளனர். எனவே மகசூல் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில் காப்பீடு தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் விவசாயிகளுக்கு நிவாரண தொகை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

கூடலூர் சாலிஸ்பரி கூட்டுறவு தொழிற்சாலை சிறு விவசாயிகள் சங்க செயலாளர் கணபதி கூறியதாவது:-

அளவுக்கு அதிகமாக பெய்த தொடர் மழையால் தேயிலை மகசூல் கூடலூர் பகுதியில் பாதிக்கப்பட்டு உள்ளது. கொப்புள நோய் உள்பட பல நோய்கள் தாக்கி உள்ளது. மழை தொடர்ந்து பெய்து வருவதால் மருந்து அடிக்க முடியவில்லை. மேலும் கடந்த 2 மாதங்களாக வெயில் இல்லை. இதனால் செடிகளில் அரும்புகள் கூட முளைக்கவில்லை. தற்போது பச்சை தேயிலை கிலோ ரூ.11 என நிர்ணயித்து விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.

இத்தொகையை வைத்து கொண்டு தோட்டங்களை பராமரித்தல், தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்குதல் என பல்வேறு செலவினங்களை மேற்கொள்ள முடியவில்லை. தொடர் மழையால் பாதிக்கப்பட்ட கூடலூர் பகுதியில் தேயிலை விவசாயிகள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே விவசாயிகளுக்கு நிவாரண தொகை வழங்க அரசு மற்றும் தேயிலை வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்