2025-ம் ஆண்டுக்குள் 151 நாடுகளுக்கு கயிறு பொருட்கள் ஏற்றுமதி செய்ய இலக்கு - வேலூரில் மத்திய மந்திரி நிதின்கட்காரி பேச்சு

இந்தியாவில் இருந்து 2025-ம் ஆண்டுக்குள் 151 நாடுகளுக்கு கயிறு பொருட்கள் ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மத்திய மந்திரி நிதின்கட்காரி தெரிவித்தார்.

Update: 2019-09-28 22:45 GMT
வேலூர், 

இந்திய கயிறு வாரியத்தின் மூலம் குடியாத்தம் பாக்கம் பகுதியில் தொடங்கப்பட்ட கயிறு குழுமம்(காயர் கிளஸ்டர்) உள்பட இந்தியா முழுவதும் தொடங்கப்பட்ட 13 கயிறு குழுமங்களின் அடிக்கல் நாட்டு விழா வேலூரில் உள்ள பென்ஸ் பார்க் ஓட்டலில் நேற்று நடந்தது. விழாவுக்கு கதிர்ஆனந்த் எம்.பி., கயிறு வாரிய முன்னாள் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், டி.சி.எம்.எஸ்.எம்.இ. இணை செயலாளர் சுதீர்கார்க், கார்த்திகேயன் எம்.எல்.ஏ. உள்பட பலர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினராக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மந்திரி நிதின்கட்காரி கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

இந்தியாவில் இருந்து 2025-ம் ஆண்டுக்குள் 151 நாடுகளுக்கு கயிறு பொருட்கள் ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் 40 கயிறு குழுமங்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இவற்றிற்கு ரூ.141 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கயிறு மூலம் பல பொருட்களை உற்பத்தி செய்ய வேண்டும். புதுப்புது பொருட்களை தயாரிக்க வேண்டும். அவ்வாறு தயாரிக்கப்படும் பொருட்கள் அனைத்தும் தரமானதாக இருக்க வேண்டும். தரமானதாக இருந்தால் சந்தையில் அதன் விற்பனை அதிகரிக்கும். பொருளாதார வளர்ச்சியும் மேம்படும்.

இந்திய அரசு பல்வேறு ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. அதில் பெட்ரோலுக்கு மாற்று சக்தி கண்டுபிடிக்கவும் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கிராமப்புற மற்றும் பழங்குடியின விவசாயிகள் வாழ்வாதாரம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

இதையடுத்து கயிறு மூலம் தயாரிக்கப்பட்ட பானை, தட்டுகள், கெடிகாரம், கைவினைப்பொருட்கள் உள்பட புதிய பொருட்களை மத்திய மந்திரி நிதின்கட்காரி அறிமுகப்படுத்தினார். இதற்கான ஏற்பாடுகளை கயிறு வாரிய வளர்ச்சி அலுவலர் பூபாலன், பாக்கம் கயிறு உற்பத்தி குழும தலைவர் சி.சிவக்குமார், செயல்படுத்துதல் ஏஜென்சி குணசேகரன் ஆகியோர் செய்திருந்தனர். விழாவில் கயிறு குழும நிர்வாகிகள், பிரமுகர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்