திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் மாணவர்களுடன் கலந்துரையாடல்

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் மாணவர்களுடன் தெலுங்கானா மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துரையாடினார். அப்போது அவர், தடைகளை தகர்த்து சாதனை படைக்க வேண்டும் என்று அவர்களுக்கு அறிவுரை கூறினார்.

Update: 2019-09-28 23:30 GMT
திருச்செந்தூர், 

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நேற்று நடந்தது. கல்லூரி முதல்வர் மகேந்திரன் வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளராக தெலுங்கானா மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டு மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

அப்போது அவர் பேசியதாவது;-

வாழ்க்கையில் சில பிரச்சினைகள் வருகிறது என்றால், நாம் வருங்காலத்தில் வளம் பெற்று வாழ வேண்டும் என்பதற்கு தான். அதேபோல் ஆசிரியர்கள், பெற்றோர்கள் எதை சொன்னாலும் அதனை மாணவர்கள் தங்களை பலப்படுத்துவதற்காக சொல்லப்படுவதாக எடுத்துக் கொள்ள வேண்டும். எதைப்பற்றியும் சிந்திக்காமல் உழைத்தால் வாழ்க்கையில் நிச்சயமாக முன்னேற முடியும்.

கடல் அலை பாறையில் மோதுவது குறித்து ஒருவர் ஞானியிடம் கேட்டார். அதற்கு ஞானி, எவர் வந்து எப்படி வந்து மோதினாலும் பலமாக இருக்க வேண்டும் என்பதை பாறை உணர்த்துகிறது. அதே நேரத்தில் அலை என்ன சொல்கிறது என்றால் பாறை எவ்வளவு பலமாக இருந்தாலும் தனது முயற்சியை கைவிட கூடாது என்பது தான். எனவே துன்பத்தில் நாம் பாறையாகவும், முயற்சியில் நாம் அலையாகவும் இருக்க வேண்டும் என்பதை இந்த இளம் வயதில் புரிந்து கொள்ள வேண்டும். கல்லூரி வாழ்க்கை என்பது மகிழ்ச்சியாக இருப்பதற்கு தான். அதனை எந்த வகையில் குறைத்துக் கொள்ளக்கூடாது. அந்த மகிழ்ச்சிக்கு ஒரு கட்டுப்பாடு இருக்க வேண்டும்.

மகாபாரதத்தில் நாம் வாழ்க்கையில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு ஒரு சம்பவம் நடக்கிறது. இதுகுறித்து பீஷ்மர் தர்மரிடம் கூறுகிறார். அப்போது கடலில் நதி வந்து சேருகிறது. அந்த நதியில் எப்போதும் நாணல்கள் அடித்து வருவது இல்லை. ஆனால் பெரிய பெரிய மரக்கட்டைகள் அடித்து வரப்படுகிறது. நாணலை எளிதில் பிடுங்கிவிடலாம். ஆனால் மரக்கட்டைகள் உறுதியாக எதற்கும் தலைவணங்காமல் இருக்கின்றன. இதனால் தான் வெள்ளம் கரை புரண்டு வரும் போது மெல்லியதாக இருக்கும் நாணலை பிடுங்காமல், உறுதியாக இருக்கும் மரக்கட்டைகளை உடைத்து கொண்டு வருகிறது.

வாழ்க்கையில் நாணல் போல் சூழ்நிலைக்கு ஏற்ப வளைந்து கொடுத்து அதே நேரத்தில் நிமிர்ந்தும் செல்ல வேண்டும் என்று கூறினார். அது தான் வாழ்க்கை. அப்படி இருந்தால் நம்மை யாரும் எதுவும் செய்யமுடியாது. சக்தி மிகுந்தவர்கள் இளைஞர்கள். அதனை சரியாக பயன்படுத்த வேண்டும். நேர்மையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும் வரை எல்லோரும் ஏற்று கொள்வார்கள். கல்லூரி வாழ்க்கை என்பது மகிழ்ச்சியாக வாழ்வதற்கும், முயற்சிகளை மேற்கொள்வதற்கும், கடுமையாக உழைப்பதற்கும், மற்றவர்களுக்கு மரியாதை கொடுப்பதற்கும் தான். இறைவன் கொடுத்த வாழ்க்கை முழுமையாக வாழ்வதற்கு தான். வாழ்க்கையை பாதியில் முடித்து கொள்ள யாருக்கும் அதிகாரம் கிடையாது. தடைகளை தகர்த்து மாணவர்கள் சாதனை படைக்க வேண்டும். அதுதான் வாழ்க்கை.

இவ்வாறு அவர் பேசினார்

நிகழ்ச்சியில் டாக்டர் சவுந்தரராஜன், ஆதித்தனார் கல்வி நிறுவன மேலாளர் வெங்கட் ராமராஜன், பேராசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் கல்லூரி செயலாளர் ஜெயக்குமார் நன்றி கூறினார்.

முன்னதாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு தமிழிசை சவுந்தரராஜன் தனது குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்ய வந்தார். அவர்களை கோவில் நிர்வாகம் சார்பில் கோவில் செயல் அலுவலர் அம்ரித் மற்றும் உதவி கலெக்டர் தனப்பிரியா, தாசில்தார் ஞானராஜ் ஆகியோர் வரவேற்றனர். பின்னர் தமிழிசை சவுந்தரராஜன் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார். பாதுகாப்பு ஏற்பாடுகளை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு குமார் மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டு பாரத் ஆகியோர் தலைமையில் செய்யப்பட்டு இருந்தது.

தூத்துக்குடி மாவட்ட பாரதி தமிழ்ச்சங்கம் சார்பில் மகாகவி பாரதியாரின் 98-வது நினைவுநாளையொட்டி பாரதி விழா தூத்துக்குடியில் உள்ள ஒரு மகாலில் நேற்று மாலை நடந்தது. இதில் தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

நான் இன்று இந்த மேடையில் நின்று கொண்டு இருக்கிறேன் என்றால், அதற்கு காரணம் என் தாய்-தந்தைக்கு அடுத்து, பாரதி மட்டும்தான் என்று எந்த மேடையிலும் சொல்ல தயார். நான் மட்டுமல்ல பெண்கள் யாராக இருந்தாலும், அவர்கள் முன்னேற்றத்துக்கு காரணம் பாரதிதான். அவருடைய பாடல்கள்தான் என்னை இங்கு நிற்க வைத்து உள்ளது.

பொது வாழ்க்கையில் பெண்கள் இருப்பது சுலபம் அல்ல. ஆனால் ஒவ்வொரு நிமிடமும் பாரதியை பற்றி நினைத்தால், ஆளுகின்ற சக்தியை கொடுத்து விடுவார். பாரதியை நினைத்துக் கொண்டால் கோழைத்தனம் வருவதற்கு வாய்ப்பே இல்லை. துணிச்சல் மட்டும்தான் வரும். பொது வாழ்க்கை பெண்களுக்கு இனிப்பாக இருக்காது. சமூகத்தில் பெண்கள் துணிச்சலுடன் இருக்க வேண்டும். பாரதியின் வரிகளின்படி தமிழ் சமுதாயத்தை காக்க, இன்று தெலுங்கு சமுதாயத்தையும் காக்க நான் வீழமாட்டேன், எழுவேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில், தொழில் அதிபர் ஜெயராமன், சங்க ஒருங்கிணைப்பாளர் விவேகம் ஜி.ரமேஷ், பேச்சாளர் வாசுகி மனோகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்